தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளுக்கு ‘நோ’
மத்தியில் அடுத்ததாக யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்? என்பதை முடிவு செய்யும் 18வது மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்த தேர்தலுக்கு முந்தையை ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பது பெரும்பாலும் ஒன்றாகவே இருந்தாலும், அவ்வப்போது அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கட்சிகள் வெற்றி பெறும் சூழல் வரும். அப்படி வரும்போதெல்லாம், தேர்தல் ஆணையமும் அந்த ஓட்டைகளை அடைக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புக்களை வெளியிட்டுத்தான் வரும்.
அந்த வகையில், குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கண்டிப்பான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிகளை மீறினாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்கு சமமாகக் கருதப்பட்டு, அந்த தொகுதியின் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு சுதந்திரம் உள்ளது.
மக்களவை தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த இந்திய ஆணையம் ஆனது தடை விதித்துள்ளது. தற்போதுள்ள மக்களவையின் பதவிக் காலம் ஆனது, வரும் ஜூன் 16, 2024ல் முடிவடைகிறது.
எனவேதான், அதற்கு முன்னதாக தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மும்முரம் காட்டி வருகிறது. ஆகவே மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும் குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது.
சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளுக்கு தடை
அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்லக்கூடாது
பிரச்சாரம், பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்கு அனுமதியில்லை
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருகில் பெற்றோருடன் குழந்தை நின்றால் அது விதிமீறலில்லை.
பிரச்சார பதாகைகளை குழந்தைகள் ஏந்தக் கூடாது
வேட்பாளர், கட்சிக் கொள்கை சார்ந்த பிரசுரங்களை விநியோகிக்கக் கூடாது
கட்சியின் சித்தாந்தங்களை எந்த வகையிலும் குழந்தைகள் மூலம் கூறக்கூடாது
கட்சி சார்ந்த மேடையில் ஏறி குழந்தைகளை கவிதை சொல்ல வைத்தல், பாட்டு பாட வைத்தல், நடனமாடவைத்தல், பேசவைத்தல் கூடாது
முந்தைய தேர்தல்களில் குழந்தைகளை கையில் கொடுத்து அரசியல்வாதிகளை பேர் வைக்க சொல்வது, குழந்தைகளை விட்டு ஆரத்தி எடுக்கச் சொல்வது, மேடையேறி பர்ஃபார்மென்ஸ் செய்ய வைப்பது என பல வகைகளில் குழந்தைகள் பிரச்சாரங்களில் ஈடுபட்டதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் வந்தன. இதையடுத்தே இப்படி ஒரு உத்தரவை தேர்தல் ஆணையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.