ஒருவேளை சுகரோ? என பயமா? இந்த அறிகுறிய கவனிங்க. . .
“அம்மா அப்பாக்கு சுகர் இருக்கு அப்ப நமக்கும் வந்திருக்குமோ?” என்ற அச்சம் பலருக்கும் தோன்றுவது இயல்பு தான்.
சர்க்கரை நோயானது பெரும்பாலும் 2 வகைப்படும். ஒன்று மரபு வழி. தாத்தா, பாட்டி, தாய், தந்தை என குடும்பத்தில் யாருக்கேனும், சர்க்கரை நோய் இருந்தால், அது பிள்ளைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டாவது “லைஃப் ஸ்டைல் டிசீஸ்” என அழைக்கப்படுகிறது. அதாவது வாழ்வியல் முறை மாற்றத்தின் விளைவாக, சர்க்கரை நோய் வருவது. தற்போது அதன் அறிகுறிகளைக் கண்டு எப்படி உஷாராவது? என பார்க்கலாம்.
- பொதுவான அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறியாகும். திடீரென உடல் எடை கூடுவதும் உடல் எடை குறைவதும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று. அடிக்கடி உடல் சோர்வடைவதும் இதே ரகம் தான்.
- கழுத்தைச் சுற்றி கரும்பட்டை
பலருக்கும் எவ்வளவு தேய்த்து குளித்தாலும், போகாதபடி கழுத்தைச் சுற்றி கரும் பட்டை தோன்றக்கூடும். இதே போல் அக்குள் உள்ளிட்ட இடங்களிலும் கரு நிறம் அதிகரிக்கலாம். இது சர்க்கரை நோயின் ஆரம்ப கால அறிகுறியாக கூறப்படுகிறது.
- சுவாசத்தில் துர்நாற்றம்
நமது மூச்சுக்காற்றிலேயே ஏதோ ஒரு லேசான துர்நாற்றம் இருப்பதாக உணரலாம். இன்சுலின் ஆனது சத்துக்களை எரிக்கும் போதை விட, கொழுப்பு சத்தை எரித்து ஆற்றலாக மாற்றும்போது இந்த துர்நாற்றம் ஏற்படக்கூடும்.
- வாய் வறட்சி
பொதுவாக தண்ணீர் பருகாத நேரங்களில் வாய் அல்லது நாக்கு, நீர் சத்து குறைபாட்டால், வறண்டு விடுவது இயல்புதான். ஆனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில், மீண்டும் நாக்கு உலர்ந்து போகுதல் சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- கால் வலி
சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு கால் வலி ஏற்படலாம். காலில் உள்ள நரம்புகளுக்கு தேவையான சத்துக்களை கடத்துவதில், சர்க்கரை நோய் சுணக்கத்தை ஏற்படுத்தும். எனவே கால் வலி, கால் வீக்கம் போன்றவை சர்க்கரை நோயின் ஆரம்ப கால அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். கெண்டைக்கால் நரம்பு இழுத்துப் பிடித்தலும், இவ்வகையிலேயே சேரும்.
- குமட்டல் வாந்தி
சர்க்கரை நோய் ஏற்படும் போது உடலில் செரிமான திறன் குறையும். செரிமானம் இன்றி போனால் உடலில் தேவையில்லாத “ஃபாரின் பாடி” அதாவது உடலுக்கு ஒவ்வாத அயலகப்பொருள் வந்துவிட்டதாக கருதி, குடல் அதனை வெளியேற்றும்.
- ஆறாத புண்கள்
உடல் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை, தானாகவே மறு சீரமைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. ஆனால், அந்த ஆற்றல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குறைவாகவே இருக்கும். எனவே, காயமோ புண்ணோ ஏதேனும் ஏற்பட்டால் அது ஆறாமல் பெரிதாகிக் கொண்டே போகும். இதுவும் சர்க்கரை நோயின் ஆரம்ப கால அறிகுறி தான்.
- இதை தவிர்க்க என்ன செய்வது?
சர்க்கரை நோய் என்பது “கேட்வே ஆஃப் ஆல் டிசீஸ்” அதாவது அனைத்து நோய்களின் வாயிற்கதவு எனப்படுகிறது. அனைத்து நோய்களும், உடலுக்குள் வருவதற்கு, வாசலை திறந்து வைப்பது போன்று இருப்பதே சர்க்கரை நோயாகும். அதனை சரியான உணவு, சீரான உடற்பயிற்சி, அதிக உடல் உழைப்பு, முறையான தூக்கம் உள்ளிட்டவை மூலம் கட்டுப்படுத்தலாம்.