உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்
உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பார்ப்போம். அதற்கு முன், ஃபின்லாந்து ஏன் 6-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20-ஐ ஒட்டி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 150 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதில் அமைதியான சூழல், மக்கள் இல்லாதவர்களுக்கு தானமளிக்கும் சதவீதம், பொழுதுபோக்கு போன்ற காரணிகள் இதை நிர்ணயிக்கிறது. மேலும், போர், வறட்சி, நோய், சண்டை, இயற்கைச் சீற்றம் உள்ளிட்டவையும் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலாக கருதப்படுகிறது.
ஒரு நாட்டின் அரசியல் சூழல், படித்த இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பு, தொழில், உற்பத்தி, மொத்த ஜிடிபி, மக்களின் நுகர்பொருள் வாங்கும் தன்மை, செழிப்பான வேளாண்மை, பத்திரிக்கை சுதந்திரம் உள்ளிட்ட காரணிகளும் இந்தப் பட்டியலை நிர்ணயிக்கிறது.
இதில் ஃபின்லாந்தானது தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா காலத்துக்கு முன்பாக இருந்த தானமளிக்கும் சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தங்கள் சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் மனப்பான்மையும் கோவிட்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் மாறியிருக்கிறது. ஃபின்லாந்து நாடானது மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுப்பதில் பிற உலக நாடுகளை விட அதிக அக்கறை கொள்வதாக இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது.
அடுத்ததாக டென்மார்க் 2-வது இடத்தையும், ஐஸ்லாந்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. இஸ்ரேல் 4-வது இடமும், நெதர்லாந்து 5-வது இடமும் பிடித்துள்ளன. ஸ்வீடன் 6-வது இடத்திலும், நார்வே 7-வது இடத்திலும் உள்ளன. சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முறையே 8, 9 மற்றும் 10-வது இடங்களைப் பிடித்துள்ளன.
ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம், செக் குடியரசு, இங்கிலாந்து, லித்துவானியா ஆகிய நாடுகள் 11 முதல் 20-வது இடங்களைப் பிடித்துள்ளன. போர் காரணமாக ரஷ்யா 70-வது இடத்திலும், உக்ரைன் 92-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 136-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோல், கடைசி 20 நாடுகள் மகிழ்ச்சியற்ற பட்டியலில் இணைந்துள்ளது. போர் நடக்கும் நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தலிபான்கள் ஆட்சி யெய்யும் ஆஃப்கானிஸ்தான் தான் உலகிலேயே மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து லெபனான், சியரா லியோன், ஜிம்பாப்வே, காங்கோ, போட்ஸ்வானா, மலாவி, கொமோரஸ், டான்சான்யா, ஸாம்பியா நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. மடகாஸ்கர், இந்தியா, லைபீரியா, எத்தியோஃபியா, ஜோர்டான், டோகோ, எகிப்து, மாலி, காம்பியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் உள்ளன.