மோடி அமைச்சரவையை அலங்கரிக்கும் பெண்கள் யார்? யார்?

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்திக் காட்டிய பெண்களின் வரிசையில் தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 5 பெண்கள் அலங்கரிக்க உள்ளனர்.

அவர்கள் யார் யார் என்பதையும், அவர்களின் பின்னணி பற்றியும் தற்போது பார்க்கலாம்.

நிர்மலா சீதாராமன்

மீனாட்சியும் சொக்கனம் குடியிருக்கும் மதுரை மாநகரில் பிறந்த நிர்மலா சீதாராமன், முதல் முழு நேர பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆவார். மிகவும் வலிமை வாய்ந்த துறைகளில் ஒன்றாக கருதப்படும் பாதுகாப்பு துறைக்கு பெண் அமைச்சர் என்பது பெண்களுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்தது.

அச்சமயத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக பாலக்கோடு வான்வழித் தாக்குதலை நடத்தி 170 க்கும் மேற்பட்ட ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகளை உறுதிபூண்டு அழிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராகத் துணை நின்றவர் நிர்மலா சீதாராமன்.

பொருளியல் படித்த இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நட்பான பரகல பிரபாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகளும் உள்ளார். கணவரின் குடும்பம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற போதும் பாஜகவில் சேர்ந்து தற்போது நிதி அமைச்சராக உயர்வு பெற்றவர் நிர்மலா சீதாராமன். கொரோனா காலத்தில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஆகவும் இவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அதுமட்டுமின்றி கார்ப்பரேட் விவகாரங்களுக்கான துறை அமைச்சராகவும் நிர்மலா சீதாராமன் பொறுப்பு வகிக்கிறார். தற்போது பிரதமர் மோடியின் அரசு 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் இந்த அமைச்சரவை குழுவிலும் நிர்மலா சீதாராமன் இடம்பெற்று இருக்கிறார்.

பன்சூரீ ஸ்வராஜ்

மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரீ ஸ்வராஜ். இவர் வார்ரிக் பல்கலைக்கழகத்தில், ஆங்கில இலக்கியமும் லண்டன் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றவர். காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், வரி, சர்வதேச வழக்குகள் என 15 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த இவர், புதுடெல்லியில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார். டெல்லியில் நடைபெறும் ஆம் ஆத்மி அரசின் மீதான விமர்சனங்கள் மூலம் இவர் அறியப்பட்டார். பாஜகவில் சுறுசுறுப்பான வேட்பாளர் என்றும் இவர் அடையாளப்படுத்தப்படுகிறார். சுஷ்மா ஸ்வராஜூக்கு இடம் கொடுத்தது போன்றே அமைச்சரவையில் பன்சூரிக்கு இடம் கொடுக்கப்படுகிறது.

அனுப்ரியா பட்டேல்

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அலங்கரிக்கப் போகும் அமைச்சர்களில் ஒருவர் அனுப்ரியா பட்டேல். இவர் உத்திரபிரதேசத்தில் ஆப்னாதல் (சோனிலால்) என்ற கட்சியின் தலைவர் நிறுவனர் சோனிலால் பட்டேலின் மகள் ஆவார். சைக்காலஜியும், எம்பிஏவும் படித்த இவர் ஆசிரியை ஆகவும் சமூக சேவகராகவும் அரசியல்வாதியாகவும் பன்முகத்தன்மை கொண்டவர். 2009 ஆம் ஆண்டு சோனிலால் பட்டேல் உயிரிழந்த பிறகு கட்சியை வெற்றிகரமாக வெளிநடத்தி வருகிறார் அனு பிரியா பட்டேல். அமைச்சரவை இவருக்கு புதிதல்ல. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்தவர் அனுப்ரியா பட்டேல். இவருக்கு இவரது தொகுதியில் அமோக ஆதரவு இருப்பதாலும் ஏற்கனவே அமைச்சரவை முன் அனுபவம் இருப்பதாலும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சோபா கரந்த்லஜே

பாஜகவை சேர்ந்த அரசியல்வாதியான சோபா கரந்த்லஜே கர்நாடகாவை சேர்ந்தவர். இவருக்கும் அமைச்சரவை என்பது புதிதல்ல. ஏற்கனவே விவசாயம் மற்றும் விவசாய நிலங்கள் துறை, உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை ஆகியவற்றில் இணை அமைச்சராக இருந்தவர். கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு மிக நெருங்கிய நம்பகமான அரசியல்வாதியான இவர், கட்சி பாஜகவில் இருந்து பிரிந்து கே.ஜே.பி. என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்தபோது எடியூரப்பாவுடன் கட்சியில் சேர்ந்தார் ஷோபா. கே ஜே பி கட்சியின் செயல் தலைவராக இருந்த அவர் 2014 ஆம் ஆண்டு அந்த கட்சி பிஜேபியுடன் மீண்டும் இணைந்த போது தாய் கட்சியான பாஜகவுக்கே திரும்பினார். தற்போது பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் இவருக்கு இடம் வழங்கப்படுகிறது

ரக்ஷா நிகில் கத்சே

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரக்ஷா நிகில் கத்சே என்பவர் என் சி பி கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் கத்சேவின் மருமகள் ஆவார். ஏக்நாத் கத்சேவின் மகனும் ரக்ஷா கத்ஷேவின் கணவருமான நிகில் கத்சே இறந்த பின்பு இவர் பொது சேவையில் நாட்டம் காட்டி வருகிறார். கிராமத் தலைவர், ஜில்லா பரிஷத் தொடங்கி 2014 ஆம் ஆண்டு முதல் எம்பியாக இருந்து வரும் ரக்க்ஷா கத்சே, பாஜகவில் குறிப்பிடத்தக்க பெண் உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். இவருக்கும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுகிறது. 16ஆவது மக்களவைத் தேர்தலில் இளம் பெண் வேட்பாளர் என்ற பெயரை 26 வயதில் பெற்ற அவர் மிகச் சிறிய வயதிலேயே 2 முறை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE