அக்னி வீர் திட்டத்தில் பெண்கள். .
அக்னிபாத் என்றால் என்ன?
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கியது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளனர். அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் “அக்னி வீரர்கள்” என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள்.
சம்பளம், பணிக்காலம் எவ்வளவு?
இவர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம். விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம். அதில் தகுதியானவர்கள் மட்டுமே 4 வருடத்திற்கு மேல் நிரந்தரமாக 15 வருடம் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர்.
சேர்வதற்கான தகுதி என்ன?
பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும். 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 10 அல்லது 12 வது வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும். கடைசி வருடம், அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.
4 வருடத்துக்குப் பின்?
4 வருடத்துக்குப் பின் 25 சதவீதம் பேருக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும். மீதமுள்ளோருக்கு அரசு, தனியார் நிறுவனங்களில் பணியில் சேர முன்னுரிமை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் அக்னி வீர் ஆவதற்கு விண்ணப்பிக்கலாம். கடற்படை, காலாட்படை, விமானப் படை ஆகிய முப்படையிலுமே சேர்வதற்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
முதல் பேட்ஜ் தயார்
ஒடிசாவில் 4 மாதம் பயிற்சி பெற்ற முதல் பேட்ஜ் கடற்படை மாணவர்கள் 2500 பேர் பயிற்சி முடித்து பாசறை திரும்பியுள்ளனர். அவர்களில் 272 பேர் பெண் அக்னி வீராங்கனைகள் ஆவர். சிறப்பாக பயிற்சி பெற்ற நபர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவர்கள், இந்தியக் கடற்படையில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு பயிற்சி அடிப்படையில் பணியாற்றுவர். அவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.