மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து சிறப்பு வழிபாடு :
“ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி” என்ற பெருமை மெச்சியவள் கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி. மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்கும், சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின் அருள் மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில், தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலில், மாதங்களில் மகத்தான மார்கழி மாத முதல் நாளில் உலகாளும் ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் அஷ்டமி சப்பர விழா நடைபெறுவது வழக்கம்.
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பவன் ஈசன். ஓரறிவு உயிரணுவில் தொடங்கி ஆறறிவு மனிதன் வரை அவனின் அருட்பார்வையினால் தான் ஜீவிக்கிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவே, அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு ஆகும்.
எறும்புக்கும் படியளக்கும் ஈசான் :
இதற்கு ஒரு புராணக்கதை ஒன்றும் கூறப்படுகிறது. ஒரு சமயம், கைலாயத்தில் பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’என்பது தான் அது. அதை சோதித்து பார்க்கும் வகையில், ஒரு எறும்பை எடுத்து குடுவைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி. குடுவைக்குள் அடைப்பட்டுள்ள அந்த சின்னஞ் சிறிய உயிருக்கு ஈசன் எப்படி படியளக்கிறார் பார்ப்போம் என்று நினைத்தாள்.
வழக்கம் போல், சிவபெருமான் அன்றைய தினம் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா? என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.
உடனே மனதிற்குள் சிரித்துக்கொண்ட சிவபெருமான், ஆம் தேவி அதில் உனக்கென்ன சந்தேகம்..? என்று கேட்டார். இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஈசனை சந்தேகப்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த திருவிளையாடல் நடந்த நாள் மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள். இந்த படியளக்கும் லீலையே சொக்கநாதர் வீற்றிருக்கும் மதுரையம்பதியில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அஷ்டமி சப்பர விழா: பெண்களுக்கான தனிச்சிறப்பு
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும், அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம். இந்நிகழ்ச்சியின்போது, அதிகாலையே சப்பரத்தில் சொக்கநாத சுவாமி, பிரியாவிடை அம்மனுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் சப்பரங்களில் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்து அருள்பாலிப்பர். மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டும் இழுப்பது தனிச்சிறப்பாகும்.
நான்கு மாசி வீதிகளிலிம் வலம் வந்த சப்பரத்தை வடம் பிடித்து இழுந்து ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வர். அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் , அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். ஏற்ற தாழ்வு இன்றி அனைத்து மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் படியளக்கும் இந்த விழா நடைபெறுகிறது.மேலும் கீழே சிதறி கிடந்த அரிசியை கூடியிருந்த பக்தர்கள் எடுத்து கொண்டு வீடுகளில் சென்று உணவு படைப்பர். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள உணவு கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது இன்றைய நாள் வரை ஈசனின் அடியவர்களால் நம்பப்படும் ஐதீகம்.