பிறப்பிலேயே கருப்பை இல்லை. இதனால் குழந்தை பெறும் பாக்யமும் இல்லை. மனம் நொந்து போயிருந்த தங்கைக்கு ஆதரவாக தனது கருப்பையை எடுத்து தங்கைக்கு வைக்க சம்மதித்தார் இப்பெண்.

இங்கிலாந்தில் முதன்முறையாக பிறப்பிலேயே கருப்பை இல்லாத ஒரு பெண்ணுக்கு, வெற்றிகரமாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் மருத்துவ சிகிச்சையில் மிகப்பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மருத்துவக் குழுவுக்கும் இரு சகோதரிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

யார் அந்த அக்கா?

சிறுவயதில் ஆடையை மாற்றி அணியும் பழக்கம் சகோதரிகளுக்கு வழக்கமானது தான். தான் அணிந்த ஆடை, பின் சகோதரிக்குக் கொடுப்பார்கள். அதேபோல்தான் தனது கருப்பையை பயன்படுத்திய 40 வயதான அக்கா 2 குழந்தைகளைப் பெற்றுவிட்டார். ஆனால், 34 வயதாகியும் கர்ப்பப்பையே இல்லாமல் பிறந்த தன் தங்கைக்கு குழந்தை பெறும் பாக்யம் கிடைக்கவில்லை. இதனால், தன் கருப்பையையே தங்கைக்கு கொடுத்துவிட முடிவெடுத்தார் அக்கா.

தன் 34 வயது தங்கைக்கு தனது கருப்பையை தானமாக வழங்கியுள்ளார். அந்நாட்டில் முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள். 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவால் 17 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கடந்த ஃபிப்ரவரியில் நடந்த இந்த அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக முடிந்தது.

இப்போது 2 சகோதரிகளும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருப்பை தானம் பெற்ற தங்கைக்கு, மறு மாதமே மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இது 34 வயதில் அவர் வாழ்வில் எதிர்கொள்ளும் முதல் மாதவிடாய் ஆகும். அவர் விரைவில் சிகிச்சை மூலம் கர்ப்பம் தரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

உறுப்பு மீட்புக் குழுவை வழிநடத்திய அறுவை சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஸ்மித் இதுகுறித்து பெருமிதம் தெரிவித்தார். “இங்கிலாந்தின் 25 வருட கருப்பை அறுவை சிகிச்சை ஆய்வுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி இது. மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. தானம் பெற்ற பெண் நலமுடன் உள்ளார். அவரால் இனி ஒன்று அல்ல இரண்டு குழந்தைகளை கூட வெற்றிகரமாக பெற முடியும். அவரது கருப்பை மிகச்சரியாகவே செயல்படுகிறது. அவரின் உடல்நலத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

“இங்கிலாந்தில் தற்போது 15,000-க்கும் மேற்பட்ட, குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்கள் கருத்தரிக்க இயலவில்லை. இது அதிர்ச்சியூட்டும் உண்மை ஆகும். அவர்களில் பலர் பிற அசாதாரணக் காரணங்களால் கருப்பையை நீக்கியவர்கள். தற்போது இந்தப் பெண்ணுக்கு செய்துள்ள கருப்பை மாற்று அறுவை சிகிச்சை பலரது வாழ்வுக்கும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது”

2014-ல் ஸ்வீடனில் ஒரு பெண் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றார். அவர் தனது 60 வயதில், தானமாகக் கருப்பையைப் பெற்றார். பிறகு உலகளவில் 100 -க்கும் அதிகமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தன. இதன் மூலம் சுமார் 50 குழந்தைகள் பிறந்தன. அமெரிக்கா, ஸ்வீடன், துருக்கி, இந்தியா, பிரேஸில், சீனா, செக் குடியரசு, ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE