வெற்றிகனி சுவைத்த பெண் வேட்பாளர்களும், அறுவடை செய்த வாக்குகளும்
18-வது மக்களவைத் தேர்தலிலேயே
தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில், 76 பேர் பெண்கள். நாம் தமிழர் கட்சி மீண்டும் பெண்களுக்கு சம பகிர்வு அளித்து 20 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. தி.மு.க 3, பா.ஜ.க 3, பா.ம.க 3, காங்கிரஸ் 2, அ.தி.மு.க 1 எனப் பெண்களுக்குத் தொகுதிகள் வழங்கியுள்ளனர்.
கனிமொழி
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டார். 5,40,729 வாக்குகள் பெற்று 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 27 பேரின் டெபாசிட்டை காலி செய்துள்ளார் கனிமொழி. முன்னாள் முதல்வரின் மகள், இந்நாள் முதல்வரின் தங்கை, கவிஞர் என்ன பன்முகத்தன்மை கொண்ட கனிமொழி எம்.பி-யான பிறகு, தூத்துக்குடியிலேயே வீடு எடுத்துத் தங்கி, தனது எம்.பி அலுவலகத்துக்கு வாரம்தோறும் வந்து பணியாற்றியதன் விளைவு இந்த அபார வெற்றி என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன
டாக்டர் ராணி ஸ்ரீகுமார்
தென்காசி தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாகச் செல்ல இருக்கிறார்.
சங்கரன்கோவில் கோமதிசங்கர் காலனியைச் சேர்ந்த ராணி ஸ்ரீகுமார் எம்.பி.பி.எஸ், எம்.டி படித்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், மயக்கவியல் நிபுணராக மாதம் ரூ.1,27,000 சம்பளம் பெற்று வந்தார். திமுக ஒன்றிய பிரதிநிதியான இவரது தந்தையும் எழுத்தாளருமான சிவக்குமார் ஓய்வு பெற்றவர். அரசு ஒப்பந்ததாரரான இவரது கணவர் ஸ்ரீகுமார் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். 2002 முதல் திமுகவில் உறுப்பினராக இருந்தாலும் நேரடி அரசியலில் முதன்முறையாக களமிறங்கி எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாமல் தேர்தலிலும் கலந்து கொள்ளாமல் அதிரடி வெற்றியை அறுவடை செய்துள்ளார். இந்த அரசியல் பிரவேசத்துக்காக தனது அரசு பணியையும் ராஜினாமா செய்துள்ளார் ஸ்ரீகுமார். எம்பி கனிமொழியின் ஆதரவுடன் இவர் களமிறக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழச்சி தங்கபாண்டியன்
தென் சென்னையில் 2வது முறையாகப் போட்டியிட்டு வெற்றி கண்ட தமிழச்சி தங்கபாண்டியன், 5 ,16,628 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட 3 பெண் வேட்பாளர்களுமே வெற்றி கண்டுள்ளனர். மூத்த அரசியல்வாதியும், தி.மு.க-வை தென் மாவட்டங்களில் வெகுவாய் வளர்த்தெடுத்த முன்னாள் வணிக வரித்துறை அமைச்சருமான தங்கபாண்டியனின் மகள் இவர்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் மூத்த சகோதரி, கனிமொழியின் தீவிர ஆதரவாளர் இவர். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் மருத்துவர் ஜெ.ஜெயவர்த்தனை மீண்டும் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளார்.
ஜோதிமணி
கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி 5,33,567 வாக்குகள் பெற்று 2வது முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார். மிக இளவயதிலேயே அரசியலில் நுழைந்து, இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்தார். தன் தீவிர பணிகளால், ராகுல் காந்திக்கு நன்கு அறிமுகமாகி பரபரப்பான சுற்றுப்பயணத்தாலும் தொகுதிக்கு மேற்கொண்ட பணிகளாலும் வெற்றியை அறுவடை செய்துள்ளார்.
சுதா
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இவர், தமிழகத்திலேயே கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர். வழக்கறிஞர் ஆன இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளையும் மகிளா காங்கிரஸ் மாநில தலைவராகவும் ராகுல் காந்தியுடன் நேரடி அறிமுகமும் கொண்டிருந்தது தான் இவருக்கு சீட் கிடைக்க முக்கிய காரணம். தொகுதிக்கு பரீட்சியம் இல்லாத போதும், முழுமையாக வலம் வந்து அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய தேவை இருந்த போதும் அந்த சவால்களை பின்தள்ளி தொகுதியின் வளர்ச்சிக்காகவும் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுவதே தன் முதல் வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் ராகுல் காந்தியிடம் நேரடியாக பேசி பல திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.