ஏன் மார்ச் 8-ல் மகளிர் தினம்?
18ம் நூற்றாண்டில் வீட்டு வேலைகளில் இருந்து தொழிற்சாலை, அலுவலகங்களில் அடியெடுத்து வைத்தனர் பெண்கள்.
ஆண்களுக்கு நிகரான பணிகளை செய்தாலும் ஊதியம் குறைவாகவே இருந்தது. இந்த அநீதியைத் எதிர்த்து திரண்ட பெண்கள் 1910-ல் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உரிமை மாநாட்டை நடத்தினர். அதில் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின் பெண்களுக்கென ஒரு தினம் கொண்டாடும் தீர்மானத்தை முன்னெடுத்தார். அப்போது, அதனை ஒருமித்த மனதுடன் நிறைவேற்ற முடியாமல் போனது.
1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சி கவிழ்ந்தது. செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார்.
ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில் புரட்சி நடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. க்ரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. அதனை அடுத்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார் கேலன்ரா. அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்துக்கு ஐநா மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன்மொழிகிறது. அதன்படி இந்த ஆண்டு ‘சிறப்பான வாழ்க்கைக்குச் சமநிலை’ என்ற கருப்பொருள் முன்மொழியப்படுகிறது.