டிராவலில் சாப்பிடக் கூடாதவை என்னென்ன?
பயணம் என்பது நமது நெடுநாள் கனவாக இருக்கலாம். அல்லது இறுக்கமான பணிச்சூழலில் இருந்து கிடைக்கும் ஒரு சிறு விடுப்பாகக் கூட இருக்கலாம். உடலுக்கும் மனதுக்கும் ரிலாக்ஸ் தரும் பயணத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால், உணவு விஷயத்தில் தேவையற்ற செலவோ, கஞ்சத்தனமோ காட்டினால் அது வயிற்று உபாதையை ஏற்படுத்தி ஆளைப் படுக்கப் போட்டுவிடும். அப்புறம் டிரிப்பின் மூடே ஸ்பாயிலாகிவிடும்.
எனவே பயண நேரத்தில் வாயைக் கட்டுப்படுத்துவது சற்று இயலாத காரியம்தான். ஏனெனில் ஆண்டின் பல நாட்கள் நமது சமையலையே சாப்பிட்டு போடித்துப் போனவர்களுக்கு வகைவகையான உணவு கண்முன் கண்டால் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால், அதை சரியான உணவாக எடுத்துக் கொண்டாலே உடலுக்கும் மனதுக்கும் பயணத்தில் நல்லது.
எந்தெந்த உணவுகள் ஆகாது?
சரிவர சமைக்கப்படாத உணவு
சரிவர சமைக்கப்படாத உணவும், அரை வேக்காடு உணவும் நிச்சயம் வயிற்றைக் கெடுக்கும். அதிலும் குறிப்பாக இறைச்சி. வீட்டில் செய்யும் இறைச்சியை விட கடைகளில் செய்யப்படும் இறைச்சி புதியதாகத் தான் இருக்கும் என்று நாம் முழுவதும் நம்பிவிட முடியாது. பயண நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து செல்லக் கூடும் என்பதால், உணவு எளிதில் ஜீரணமாகிவிடும் என எதிர்பார்க்க முடியாது.
தெருவோரக் கடை உணவு
பணத்தை மிச்சம் செய்கிறேன் என்ற பேர் வழியில் தெருவோரக் கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுவது என்பது அவ்வளவாக பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம் அங்கு சுத்தமும், சுகாதாரமும் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே இருக்கும். அனைவரும் சாப்பிட்ட தட்டு, ஸ்பூன், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை சரிவர கழுவியிருப்பார்களா என்பதும் பெரும்பாலான இடங்களில் சந்தேகமே. இது தேவையற்ற நோய்ப்பரவலை ஏற்படுத்திவிடும்.
பதப்படுத்தப்படாத பால் உணவுகள்
பழைய பனீர், பழைய பால் பொருட்களிலும் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இது உடல்நலத்தை பெருமளவு கெடுத்துவிடும். எனவே பதப்படுத்தப்படாத பால் பொருட்களை விட பெரிய பெரிய கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
பைப் தண்ணீர்
தண்ணீர் மாற்றிக் குடித்தாலே பெரும்பாலானோருக்கு சளி பிடிக்கக் காரணம் அதில் உள்ள புது ரக பாக்டீரியாக்கள்தான். அது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். நிச்சயம் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். அல்லது காய்ச்சல், சளி போன்ற தேவையற்ற அவஸ்தைகளை இழுத்துவிட்டுவிடும். இதன் காரணமாக பயணத்தின் பின்பும் அலுவலகத்துக்கோ, அன்றாடப் பணிகளுக்கோ கூடுதல் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.
ஐஸ்கட்டி
பருகும் பானங்களில் ஐஸ்கட்டி போடுவது புதிய சீதோஷ்ண நிலைக்கு நிச்சயம் உடல் உபாதையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். சுகாதாரமற்ற நீரில் பாக்டீரியாக்கள் ஐஸ்கட்டியினுள் உறைந்து கிடக்கும். முதலில் தொண்டை அலற்சி, இருமல், இதையடுத்து சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்குக் காரணமாக அமையும்.
கழுவப்படாத பழங்கள்
கழுவப்படாத பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை அப்படியே வாங்கி சாப்பிடுவதும் தேவையற்ற ஆரோக்யக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிக் கொல்லிகள், பாக்டீரியாக்கள் இருக்கக் கூடும். இதற்கு பதிலாக சமைத்த காய்கறிகளை வாங்கியே சாப்பிட்டிருக்கலாம்.
கடல் உணவுகள்
கடல் உணவுகள் பெரும்பாலும் எந்தத் தொந்தரவும் செய்யாது. ஆனால், கடல் உணவு சாப்பிட்டால் அலர்ஜி இருக்கும் எனக் கருதுபவர்கள் அதை அவாய்ட் செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக ஷெல் ஃபிஷ் சுவையாக இருந்தாலும், அது பயண நேரத்தில் உகந்த உணவல்ல.