10 வயதில் மரணம், 10 நாட்களுக்கு முன் திருமணம், என்ன ஆச்சு?
அமெரிக்காவில்தான் மனதை உலுக்கும் சம்பவம் நடந்தது. அழகிய தேவதை போல் உள்ள இவர் எம்மா எட்வர்ட். பிற குழந்தைகளைப் போல் இவரும் ஓடி ஆடி சந்தோஷமாக விளையாடிக் கொண்டு இருந்தார். இவரது விளையாட்டுத் தோழரும், டேனியல் மார்ஷல் கிறிஸ்டோஃபரும் ஆருயிர் நண்பர்கள். இருவரும் சேர்ந்தால் அந்த இடமே கலகலப்பாகிவிடும்.
அப்படி கலகலவென சிரிக்கும் இவரது சிரிப்பு வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. திடீரென எம்மாவுக்கு ஒருநாள் காய்ச்சல் வந்தது. சாதாரண காய்ச்சல்தான் என பெற்றோர் நினைத்திருந்தனர். ஆனால், எலும்புவலி அதிகம் இருந்தது. காய்ச்சல் குறையாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தனர். 2022-ல் நடந்த இந்தப் பரிசோதனையில், எம்மாவுக்கு Acute Lymphoblastic Leukemia என்ற கேன்சர் இருப்பதாக தெரியவந்தது. அவரால் நடக்க முடியாமலும் போனது.
இருப்பினும் அவருக்கு போதிய அளவு சிகிச்சை அளித்து வந்தனர். எம்மா மீண்டும் எழுந்து நடமாடுவார் என்ற எண்ணம் அவளது பெற்றோரிடம் இருந்தது. எம்மா தன்னுடன் மீண்டு வந்து விளையாடுவார் என டேனியலும் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், இடியாய் வந்தது ஒரு அதிர்ச்சி செய்தி. கேன்சர் அதிகம் பரவிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நாள் குறித்த மருத்துவர்
பெற்றோரின் நம்பிக்கையை உடைக்கும் விதமாக வந்த அதிர்ச்சி செய்தியால் நொறுங்கிப் போயினர். ஓரிரு வாரங்களே மட்டும்தான் உயிரோடு இருப்பார் எனத் தெரியவந்தது. இதனால் அவருக்கு விருப்பமான அனைத்தையும் செய்து கொடுத்தனர். தாங்கள் பார்த்துப் பார்த்து வளர்த்த குழந்தை ஓரிரு நாட்களில் பிரிந்து சென்றுவிடும் என அறிந்ததால் அவருக்கு இன்னொன்றையும் செய்து வைத்தனர். ஒருநாள் விளையாட்டாக “நான் டேனியலைத் திருமணம்” செய்து கொள்ளட்டுமா? எனக் கேட்டது நினைவுக்கு வந்தது.
நாள் குறித்த பெற்றோர்
மருத்துவர் ஓரிரு வாரங்கள் என எம்மா உயிருக்குக் கெடு விதித்த பின், பெற்றோர்கள் ஒரு நாள் குறித்தனர். அந்த நாளில் டேனியலுக்கும் எம்மாவுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். இதற்கு டேனியலும், அவரது பெற்றோருக்கும் கூட முழு மனதுடன் சம்மதித்தனர். இருவருக்கும் கடந்த ஜுன் மாதம் 29-ம் தேதி திருமணம் நடந்தது. பைபிளை மனதுக்குள்ளேயே படித்து டேனியலை தன் கணராக ஏற்றுக் கொண்டார் எம்மா.
அடுத்து நடந்த சோகம்
திருமணம் நடந்து 10 நாட்கள் தான் ஆனது. எம்மா கடைசியாக ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டு தனது இறுதி சுவாசத்தை வெளியிட்டார். அதன்பின் அவர் எத்தனை கதறல்களுக்கும் செவி மடுக்கவில்லை. எம்மா இறந்துவிட்டார். அனைவரும் அச்சத்துடன் எதிர்பார்த்த அந்த நாள் அவரது உயிரைப் பறித்துவிட்டது.
இளம் வயதில் காதல் என்பதை எந்தப் பெற்றோரும் ஏற்க மாட்டார்கள். ஆனால், இறுதிக் கட்டத்தில் இப்படி ஒரு கோரிக்கையை யாரும் நிராகரிக்கமாட்டார்கள். அப்படி ஒரு சிறுபிள்ளைத்தனமான அன்பு ஜெயித்தாலும், அவர்களது வாழ்க்கை வெறும் நினைவாக மட்டுமே இருக்கிறது. அன்பு வென்றது, ஆனால் உயிர் பிரிந்துவிட்டது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.