விருதுநகர் ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி?
மீன் குழம்பை தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு பகுதியினர் ஒவ்வொரு மாதிரி செய்கின்றனர். அதில், விருதுநகர் பகுதிகளில் மீன் குழம்பை எப்படி நாவில் எச்சில் ஊறுவது போல செய்கின்றனர் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

செய்யத் தேவையான பொருள்கள்
- மீன்
- புளி
- சின்ன வெங்காயம்
- நல்லெண்ணெய்
- உப்பு
- மிளகாய்த்தூள்
- மல்லித்தூள்
- வெந்தயம்
செய்முறை
கொங்கு பகுதியில் வெங்காயம், தக்காளியை வதக்கி, அதில் பூண்டு சேர்த்து மீன் குழம்பு வைப்பார்கள். ஆனால், விருதுநகர் பகுதிகளில் வெங்காயத்தை அரைத்து அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து மீன் குழம்பு வைப்பார்கள். இரண்டு குழம்பிலுமே சுவையில் பஞ்சம் இருக்காது என்றாலும், இந்த தொகுப்பில் நாம் விருதுநகர் ஸ்டைல் மீன் குழம்பைத்தான் பார்க்கப் போகிறோம்.

மதுரை போன்ற ஆற்றுப்படுகைகளில் ஆற்று மீனும், ஊரகப் பகுதிகளில் குளம், கண்மாய், ஏரி மீனும், கடலோரப் பகுதிகளில் கடல் மீனும் தாராளமாக கிடைக்கும். இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நமது குழம்புக்கு நாம் ஒரு கிலோ மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்வோம்.
ஒரு எலுமிச்சைப்பழம் அளவிலான புளியை முதலில் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளலாம். அதன்பின், அரை கிலோ சின்ன வெங்காயத்தை உரித்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இனி, அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளலாம்.
அடி கனமான பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து 100 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்த பின்னர் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு, அது கருகும் முன் அரைத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போட்டு விடலாம்.
வெங்காயம் முழுமையாக வதங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதோடு சேர்த்து, கரைத்து வைத்திருக்கும் புளி, தேவையான அளவு கல் உப்பு, 2 ஸ்பூன் மிளகாய் பொடி, 4 ஸ்பூன் மல்லிப்பொடி, தேவையான அளவை விட 100 மில்லி அதிகமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா அனைத்தும் தண்ணீரில் நன்றாக கலக்கும்படி கிளறிவிடவும்.

சுமார் 15 நிமிடங்கள் குழம்பு தளதளவென கொதித்தபின், உப்பு, புளி, காரம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கவும். மூன்றுமே சற்று தூக்கலாக இருந்தால் குழம்பு நன்றாக ருசிக்கும்.
குழம்பு எண்ணெய் பிரிந்து குழம்பு பதத்திற்கு வந்த பின்னர், அறுத்து வைத்திருக்கும் மீனை உள்ளே போட்டுவிடலாம். கடல் மீனாக இருந்தால் ஐந்து நிமிடங்கள் முழு நெருப்பில் கொதிக்க விட்டு, ஐண்டு நிமிடங்கள் சிம்மரில் வைத்து இறக்கிவிடலாம். மீன் சரியான பதத்தில் இருக்கும். ஏரி மீனாக இருந்தால், அது வேகும் வரை குழம்பை கொதிக்க விட வேண்டும்.
மீனைப் போட்ட பிறகு குழம்பில் தண்ணீர் ஊற்றக்கூடாது. ஆகவே, மீன் போடுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கொதிக்க விடப் போகிறோம் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப தண்ணீரை கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். விருதுநகர் ஸ்டைல் மீன் குழம்பில், கறிவேப்பிலை, தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பயன்படுத்த மாட்டார்கள். உங்களுக்கு தேவையென்றால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சுவையான மீன் குழம்பை மறுநாள் வைத்திருந்த சாப்பிட்டால் ஊரே மணக்கும். தோசை, சோறு, சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் இந்த மீன் குழம்பை பயன்படுத்தலாம்.