30 ஆண்டு போராட்டமும், வாச்சாத்தியின் கொண்டாட்டமும். . .

1992 ஜூன் 20, வீரப்பனும், கடத்தப்பட்ட சந்தன மரக்கட்டைகளும்தான், வாச்சாத்தி கிராமத்தைச் சுற்றிவளைத்த 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர் 6 வருவாய்த்துறையினர் உள்ளடக்கிய 269 பேர் கொண்ட குழுவின் நோக்கம். ஆனால், வீடுகளில் மறைத்து வைக்கப்பட்ட சந்தனமரக்கட்டைகளைப் பறிமுதல் செய்யச் சென்றபோது, கடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட ஆண்கள் தலைமறைவாக, அங்குள்ள, 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் துன்புறுத்தல்

எப்படியும் அப்பெண்களைத் தேடி ஆண்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் கைது நடவடிக்கை நிகழ்ந்தது. ஆனால், அவர்களில் 18 மலைவாழ் பெண்கள் அதிகாரிகளால் கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வீடுகளும் சூறையாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

சிபிஐ விசாரணை

பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கைத் தொடர சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. 1995-ம் ஆண்டு விசாரணை தொடங்கி மறு ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று 215 பேரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பளிக்கப்பட்டனர்.

மேல்முறையீடு

தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஒருவழியாக அனைத்து தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டது?

  • 215 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி
  • பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு
  • பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டால், அவர்களது குடும்பத்துக்கு இழப்பீட்டை வழங்கவும்
  • குற்றம்புரிந்தவர்களிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க வேண்டும்
  • பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்
  • 12 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை. 5 பேருக்கு 7 ஆண்டு சிறை.
  • பிறருக்கு 1 முதல் 3 ஆண்டு சிறைதண்டனை

இந்த தீர்ப்பு உறுதியானதை அடுத்து வாச்சாத்தி கிராமமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களும் அரங்கேறியுள்ளன. இனிப்புக்களையும் வழங்கி தங்களது 30 ஆண்டு சட்டப் போராட்டத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும் தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாக, குற்றவாளிகள் என தீர்ப்பானவர்களின் தரப்பில் சொல்லப்படுவதால், இந்த சட்டப் போராட்டம் மீண்டும் இழுபறியாக நீடிக்கவும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE