திருச்சி ஸ்ரீரங்கநாதன் தான் ராமரின் குலதெய்வமா?
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் தான் ராம பெருமானின் குலதெய்வம் என்று மெய்சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பலகட்ட சட்ட போராட்டங்களுக்கு பின் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலானது ஜனவரி 22 ஆம் தேதி அதாவது வரும் திங்களன்று நடைபெற உள்ளது.
அந்த கோவிலுக்கும் தென்னிந்தியாவில் உள்ள தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதனுக்கும் என்ன சம்பந்தம்? என்றும் அதில் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியும் துல்லியமாக விளக்குகிறது த காரிகை.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆனது பூலோக வைகுண்டம் என்று போற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதுதான் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கர் எப்படி ராமரின் குலதெய்வம் ஆனார்?
பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வழிபட்டு தோன்றியதால் ஸ்ரீரங்கம் கோவில் சுயம்பு என்று சொல்வார்கள்.
இந்த கோவிலில் உள்ள சிறப்புமிக்க மூலவரான ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்வதற்காக சூரியனை நியமித்தார் பிரம்மா.
சுயம்புவான இந்த கோவிலில் இருந்து சிலையை வழிபடுவதற்காக அயோத்தி தலைநகருக்கு எடுத்துச் சென்றார் ரகு வம்சத்தில் பிறந்த சூரிய குலத்தைச் சேர்ந்த இட்சுவாகு அரசன்.
இந்தச் சிலையை ராமர், தசரதர் உள்ளிட்ட பலரும் வழிபட்ட நிலையில், இலங்கையில் இருந்து தனது பட்டாபிஷேகத்திற்காக வந்த ராவணனுடைய தம்பி விபீஷணனுக்கு அந்த குலச் சொத்தான சிலையை பரிசாக கொடுத்து அனுப்பினார் ராமர்.
இதனை விபீஷணனானவர் தனது தலையில் சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது திருச்சி காவிரி ஆற்றின் கரையை அடைந்தார்.
சாமி சிலை என்பதால் தலையில் இருந்து கீழே இறக்கி வைக்க கூடாது என்று அவர் மிக கவனத்துடன் வந்து கொண்டிருந்தார்.
மிகவும் களைப்பாக இருந்ததாலும் நீராட வேண்டும் என்று விரும்பியதாலும் அங்கு இருந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவரை அழைத்து சிலையை சற்று பிடித்துக் கொள் என்று கையில் கொடுத்துவிட்டு கீழே வைக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்.
இதை அடுத்து காவிரி ஆற்றில் விபீஷணன் நீராடினார்.
ஆனால் விபீஷணன் நீராடி முடித்து வரும் முன்பே அந்த சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டார்.
கோபத்தோடு விபீஷணன் அந்த திருவனை அணுகிய போது அந்த சிறுவன் விநாயகப் பெருமானாக மாறி சிலையை கீழே வைத்தது நான்தான் என்று கூறிவிட்டு மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்து விட்டார்.
காவிரிக் கரையோரத்தில் இருந்து அரங்கநாதர் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்க வேண்டும் என்றும் தர்மவர்ம சோழன் தவமியற்றி கோரிக்கை வைக்க, காவிரி கரையில் தங்கி இருக்கவே அரங்கநாதரும் விருப்பப்பட்டார்.
விபீஷணனும் மனம் உடைந்து போகக்கூடாது என்பதற்காக இலங்கை பகுதி அமைந்துள்ள தென்திசை நோக்கி அமர்ந்து பள்ளி கொண்டருள்வதாக ரங்கநாதர் உறுதி அளித்தார்.
இதை எடுத்து சிலையைச் சுற்றி கோவில் அமைத்தார் தர்மவர்ம சோழன்.
எனவே தான் கோவில் கருவறையை சுற்றி உள்ள முதல் சுற்று தர்மவர்மன் சுற்று என்றும் அழைக்கப்படுகிறது
ஆனால் இவருக்கு கிளி சோழன் கிள்ளிவளவன் என்று பெயர் வரவும் ஒரு காரணம் உள்ளது.
ஒருமுறை காவிரி ஆற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கோவில் முழுவதும் மணலால் மூடப்பட்டது. கோவில் இருக்கும் இடமே தெரியவில்லை.
எனவே கோவிலை கண்டுபிடிக்க இயலாததால் தர்மவர்ம சோழன் ஒரு கிளியை அனுப்பினார். அந்த கிளி கோவில் இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டுபிடித்தது. இதை அடுத்து மணலையகற்றி கோவிலை மீண்டும் சுத்தம் செய்தனர். எனவே அவர் கிளிச்சோழன் என்றும் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப்பட்டார்.
இதனால்தான் ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு அவர் ஒரு பிரம்மாண்ட கோவிலையும் காவிரி ஆற்றங்கரையிலேயே கட்டினார்.
கோவிலின் தங்க விமானம் கூட ராமர் கையினால் கொடுக்கப்பட்டு விபீஷனனால் கொண்டு வந்தது தான் என்று சொல்லப்படுகிறது.
இது பற்றி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோவில் கொங்கிலாச்சான், ராமராஜ நரசிம்மச்சாரியார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் அதன்படி “ஸ்ரீ ராம பெருமானுடைய குலதெய்வம் ஆனது அரங்கநாதர்தான். ராமர் தனது கரங்களினால் பூஜித்த பெருமாள்தான் ஸ்ரீரங்கம் அரங்கநாதர். அஜன், திலீபன், தசரதன் ஆகியோர் ராமரின் முன்னோர்கள். அவர்களும் அரங்கநாதரை தொடர்ந்து வழிபட்டு வந்துள்ளனர்.
ராமருடைய குலத்தின் சொத்தே அரங்கநாதர் தான். விபீஷணன் மிகப்பெரிய ராட்சசன் என்பதால் தான் அந்த பெரிய விமானத்தை அவரால் ஸ்ரீரங்கம் வரை சுமந்து கொண்டு வந்திருக்க முடிந்தது. தர்மவர்ம சோழனின் தவத்தால் தற்போது நாம் திருச்சியிலேயே அரங்கநாதரை தரிசிக்கிறோம்” என்றார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.