கோவைக்கு மிக அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

ஆண்டு முழுக்க வேலையோ. . . படிப்போ. . . கண்டிப்பாக ஒரு பிரேக் தேவை. அந்த பிரேக் ஒரு பிக்னிக் அல்லது லாங் டூரோடு அமைந்தால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே இன்ஸ்டன்ட் குஷி மோடுக்கு மாறிவிடுவர்.

பத்து நாட்கள் ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்ட வெளியூர்-வெளிமாநில-வெளிநாட்டுப் பயணங்கள் கூட வெற்றிகரமாக நடக்கும். ஆனால் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு திடீரென புறப்பட்டு செல்லும் பயணம் வாழ்வின் மகிழ்ச்சி குறிப்புகளில் பல புது பக்கங்களை உருவாக்கும்.

பிக்னிக் என்பது பொதுவாக ஒரே நாளில் சென்று விட்டு திரும்புவது ஆகும். சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பிழைப்பு தேடி சென்றவர்கள் கூட, கோடை விடுமுறை வந்தால் கொங்கு மண்டலத்தை தேடி ஒருமுறையாவது வந்து செல்வர். அதற்கு ஊட்டி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் எத்தனை முறை தான் ஊட்டிக்கே செல்வது? என பலரும் நினைத்திருக்கலாம்.

அவ்வாறு ஊட்டி போரடித்து போனவர்களுக்கு, கோவையை சுற்றி வேறு என்னென்ன சுற்றுலா தளங்கள் எல்லாம் உள்ளன என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது The Karigai.

கோவை மாநகரிலிருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ளது சிறுவாணி அருவி. இதனைக் கோவை குற்றாலம் என்றும் அழைப்பர். இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. எனவே தனிப்பட்ட வாகனங்களில் செல்வோர், ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைந்ததும், அங்கேயே வாகனங்களை நிறுத்தும் சூழல் ஏற்படும். அதன்பின் வனத்துறை வாகனத்தில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு இறங்கியதும் சிறிது தூரம் கரடு முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டும். அருவியை நெருங்கும் போதே அதன் சத்தம் மனதை உற்சாகத்தில் ஆழ்த்தும். இந்த வனப் பகுதிக்கு உள்ளே பிளாஸ்டிக் பாலிதீன் போன்ற பொருட்கள் அனுமதி இல்லை.

சிறுவாணி அருகே கோவை குற்றாலம் சென்றவர்கள் திரும்ப வரும் வழியில் ஈஷா யோகா மையத்தை அடையலாம். வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள இந்த அறக்கட்டளையில் பல்வேறு அமைதியான தியானத்துக்கு ஏற்ற இடங்கள் உள்ளன. மாலை 6 மணிக்கு மேல் இங்கு உலகப் பிரசித்தி பெற்ற லேசர் ஷோ நிகழ்ச்சி கண் கவர் வகையில் தினமும் நடைபெறும்.

கோவையில் இருந்து 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சைலன்ட் வேலி தேசிய பூங்கா. கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காட்டில் இது உள்ளது. இங்கு சிங்கம், புலி, யானை, கரடி போன்ற விலங்குகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உலவுகின்றன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் காணும் வகையில் 200க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள், 400க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் உள்ளன. சிங்கவால் குரங்கு, அனுமன் குரங்கு என ஏராளமான பறவை இனங்களும், அதிசயமான, அழகான பூக்கள், அழகும் திரில்லும் சேர்ந்த தொங்கு பாலமும் உள்ளன.

கோவையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மலம்புழா டேம். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் அழகிய பூங்காக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாலக்காட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலம்புழா டேமில் அம்யூஸ்மென்ட் பார்க், படகு வசதி, பாறை தோட்டம், ரோப்வே உள்ளிட்டவை உள்ளன.

கோவையில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாலக்காட்டுக்கோட்டை. இது கேரள மாநிலம் பாலக்காட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவில் சிறப்பாக பாதுகாக்கப்படும் கோட்டைகளில் ஒன்றான இது சுல்தான் ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டிருந்தது. கோட்டையினுள் ஆஞ்சநேய சுவாமி கோவிலும் உள்ளது. கோட்டைச் சுவரின் உட்பகுதியில் ஆஞ்சநேயர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தானும், அவரது படை வீரர்களும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காக்க இந்த அனுமனை வணங்கியதாக சொல்லப்படுகிறது.

கோவையில் இருந்து 87 கி.மீ.,ல் உள்ளது பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம். வனத்துறை அனுமதியோடு சஃபாரி சென்றால், புலி, மான் உள்ளிட்ட விலங்குகளை நேரிலேயே காணலாம். குறிப்பாக நீர்நிலை ஓரம் காத்திருந்தால், இந்த அரிய வாய்ப்பு கிடைக்க பெறும்.

கோவையில் இருந்து 94 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கிறது அமராவதி அணை. இங்கு, தண்ணீர் திறப்பின் போது அருவி போல நீர் கொட்டுவதைக் காண எழில்மிகு காட்சியாக இருக்கும். அதுமட்டுமின்றி இயற்கை சூழலில் வளர்க்கப்படும் முதலைப் பண்ணையையும் பார்வையிடலாம்.

Facebook
Instagram
YOUTUBE