பெரும்பாலான ஊர்களில் தயிர் சாதத்துக்கு ஊறுகாய், உருளைக்கிழங்கு பொறியல், சிப்ஸ், முறுக்கு உள்ளிட்டவற்றை வைத்து சைட் டிஷ்ஷாக சாப்பிடுவதை பார்த்திருப்போம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ஆனால் கொங்கு மண்டலத்துக்காரர்கள் தயிர் சாதம் சாப்பிட சைடு டிஷ் ஆக வீட்டில் செய்வதுதான் இந்த காரசாரமான சிக்கன் சிந்தாமணி.

தயிர் சாப்பாடு மட்டும் இன்றி சாதம், கஞ்சி, தோசை, சப்பாத்தி என பல உணவுகளுக்கும் ஏற்ற சைடிஸ் இந்த சிக்கன் சிந்தாமணியாகும். கண்ணில் தண்ணீர் வரும் அளவுக்கு காரசாரமான இந்த உணவை கொங்கு மண்டலத்திற்கே சிறப்பான அரிசிம்பருப்புடன் வைத்து சாப்பிட்டாலும் ருசி அபாரமாக தான் இருக்கும்.

கேட்கும் போதே சாப்பிட தோன்றுகிறதா?. உடனே அரை கிலோ சிக்கன் வாங்கி வந்து ஈரோட்டு ஸ்டைலில் சிக்கன் சிந்தாமணி செய்து பாருங்கள்.

வீட்டில் 2 பேர் இருந்தாலும் கூட ஆளுக்கு கால் கிலோ சாப்பிட்டு விட்டு, இன்னும் கிடைக்குமா என சட்டியை சுரண்டும் நிலை தான் வரும்.

அவ்வளவு ஈஸியான ஈரோடு ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்

அரை கிலோ சிக்கன்
1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
கருவேப்பிலை சிறிது
1 கப் சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
12 வரமிளகாய்
கால் கப் துருவிய தேங்காய்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு தேவைக்கேற்ப
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

நறுக்கிய தேங்காய் ஒரு கையளவு

எப்படி செய்யறது?

சிக்கன் நாட்டு கோழியாக இருந்தால் நல்லது தான். அதை நன்கு கழுவி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடேற்றவும்.

கொஞ்சம் கருவேப்பிலையும் கில்லி போட்ட வர மிளகாயும் சேர்த்து தாளிக்க வேண்டும். மிளகாயை கில்லும் போதே விதைகளை உதிர்த்துக் கொள்ளவும்.

மிளகாய் காந்தல் மூக்கில் ஏறும். எனவே கவனமாக செய்யவும். முதலிலேயே எக்ஸாஸ்டிங் ஃபேன் அல்லது சிம்னியை ஆன் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான் வீட்டில் பிறரிடமும் திட்டு வாங்காமல் சமைத்து முடிக்க முடியும்.

சிறிது நறுக்கிய வெங்காயத்தை போட்டு அதில் உப்பை தூவிக் கொள்ளவும். வெங்காயம் நன்கு மென்மையாக வரும் அதை வதக்க வேண்டும்.

இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, அதன்பின் மிளகாய் தூளும் மஞ்சள் தூளும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

கழுவி வைத்த சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி கால் கப் நீரை ஊற்றவும்.

கடாயை மூடி வைத்துவிட்டு 30 நிமிடம் சிம்மில் வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும் தேங்காயை தூவி நன்கு கிளறவும். நாட்டுக்கோழியாக இருந்தால் கோழி வேக நேரம் ஆகலாம்.

துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய் போட்ட பின் வாணலியை மூடி ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கினால் ஈரோடு சிக்கன் சிந்தாமணி தயார்.

காரம் அதிகம் இருக்கும் என்பதால் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், காரம் ஆகாதவர்கள், காரம் சாப்பிடக் கூடாது என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கலாம். அல்லது மிளகாய் காரத்தை குறைத்து விட்டு தேங்காய் எண்ணெயில் சிக்கன் சிந்தாமணி செய்து கொடுக்கலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE