பழனி கோவில் செல்போன் தடை. எங்கே, இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க!

பழனி மலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஏற்கனவே பிரபல கோவில்களான திருப்பதி ஏழுமலையான் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், பத்மாவதி தாயார் கோவில் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே கோவிலுக்குள் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. அதே போல் அந்த ஆலய நிர்வாகங்கள் சார்பில் செல்போனை பாதுகாக்க பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முக்கிய காரணம் கருவறையில் உள்ள தெய்வங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என்பதற்காக தான் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களில் புகைப்படங்கள் வீடியோக்களை குருக்களை எடுத்து அவர்களது யூடியூப் பக்கங்களில் பதிவேற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

முருகனின் 3-ம் படை வீடான பழனியிலும் பக்தர்கள் செல்போன் மூலம் கருவறையில் உள்ள மூலவரை படம் எடுத்து சமூக வலைதளங்கள் வெளியிட்டு வந்தனர். கேமராக்கள் கொண்டு வந்து படம் எடுக்கும் சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் 1-ம் தேதி முதல் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து கட்டணம் வசூலிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

பழனியில் பாத விநாயகர் கோவில், இலுவை ரயில், ரோப் கார் என 3 இடங்களில் செல்போனை ரூ.5 கட்டணம் செலுத்தி வைத்துக் கொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது.

பக்தர்களுக்கு செல்போன் வைக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் பேருந்து நிலையம் முதல் பழனி மலை அடிவாரம் வரை ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் நின்று நேரத்தை வீணாக்குவதை தவிர்க்க பணியாட்களை அதிகப்படுத்தவும், நிழற்குடை அமைக்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. எனவே பழனி மலை கோவிலுக்கு வருபவர்கள் செல்போனை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.

நடைமுறை சிக்கல்களும் கேள்விகளும். . . !

கோவிலுக்குள் செல்போன் அனுமதி இல்லை. அதற்குக் காரணம் வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது தான் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதே கோவில் நிர்வாகம் தான், கோவிலில் ஏதேனும் விசேஷ காலங்கள் வரும்போது அதனை நேரலை ஒளிபரப்பாக மக்களுக்கு காட்ட வீடியோவாக எடுக்க அனுமதிக்கிறது. மேலும் சாமியின் ராஜ அலங்காரத்தைதான் புகைப்படமாக எடுத்து, கோவில் நிர்வாகம் நடத்தும் கடைகளில் சாமி புகைப்படமாக விற்க அனுமதிக்கப்படுகிறது.

புகைப்படம் எடுத்தால் புனிதம் கெட்டுப் போகிவிடும் என்று கூறும் போது கோவில் நிர்வாகமே அந்த கோவிலை பற்றிய ஒரு மதிப்பு மேம்பாட்டுக்காக அதனை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுக்க அனுமதிப்பது பக்தர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பழனி மலை கோவிலுக்கு வருவோர் கிட்டத்தட்ட 2 முதல் 3 மணி நேரம் வரை மலை ஏறி சென்று கீழே வர நேரம் எடுக்கும் அதுவும் குறிப்பாக விசேஷ நாட்களில் 10 முதல் 15 மணி நேரங்கள் கூட ஆகலாம். இவ்வளவு நேரம் ஒருவர் செல்போன் பயன்படுத்தாது முக்கிய அழைப்புகளை ஏற்க இயலாது இருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

பழனி முருகன் கோவில் என்பது ஏராளமான பக்தர்கள் கூட்ட நெரிசலில் வந்து செல்லும் இடமாகும். ஒருவேளை கூட்ட நெரிசலில் எங்கேயும் வழிதவறி தொலைந்து விட்டால் கூட அவர்களால் தங்களது பெற்றோரையோ உறவினர்களையோ அழைத்து தான் இங்கு இருக்கிறேன் என கூறும் வாய்ப்பு தடைபட்ட போய்விடும்.

மேலும் திருப்பதியை உதாரணமாக காட்டும் நிலையில் அங்கு உள்ள சுகாதார வசதிகள், பக்தர்கள் பாதுகாப்பு, செல்போன் உடமைகளுக்கான பாதுகாப்பு உள்ளவை பழனி மலைக்கோவிலும் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஐபி, விவிஐபி தரிசனங்களில் வருவோர், அவர்களின் உடன் வருவோரின் செல்போன்களும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலாகும் தடைக்கு உட்பட்டு வருமா? அல்லது இலவச, சாதாரண கட்டண தரிசன வரிசையில் வருவோருக்கும் மட்டுமே இந்த விதியா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

வயதானவர்களும் வந்து தரிசனம் செய்யும் பழனி மலை முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மேலே ஏறி செல்லும் முதியவர்களுக்கு ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால் கூட, உடனடியாக தனது உறவினர்களையோ தனது வீட்டில் இருப்பவர்களையோ அணுக முடியாத சூழல் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் செல்போனில் வீடியோ புகைப்படம் எடுக்கிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேவைப்பட்டால் கோவில் சன்னிதானம் இருக்கும் பகுதியை ஒட்டிய இடங்களில் செல்போன் வாங்கி வைக்கும் கவுன்டர்களை வைத்து சாமி தரிசனம் செய்து முடித்ததுவிட்டு வெளியே வந்தவுடன் அவற்றை பெற்றுக் கொள்ளும் வசதியையும் கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி தருவதை பற்றி யோசிக்கலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE