கருவில் குழந்தை எடை, தோற்றம் நிர்ணியிப்பவை?
ஒரு பெண் கர்ப்பம் ஆனதும் அவள் அழகழகான குழந்தைகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும், போஸ்டர்களையும் பார்க்கும் வகையில் அனைவரும் உற்சாகமூட்டுவர். இதற்கு காரணம், எண்ணம் தான் செயலாகும் என்பதால் அழகிய வடிவான குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதேபோல் யாரை அதிகம் நினைக்கிறோமோ, பார்க்கிறோமோ அவர்களின் உருவிலேயே குழந்தை பிறக்கும் என்றெல்லாம் கூட சொல்வார்கள்.
ஆனால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பல விஷயங்கள் குழந்தையின் உருவத்தோற்றத்தை மாற்றியமைக்க கூடியதாக அமையும் என்கின்றனர் சில மருத்துவர்கள். அவை என்னென்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.
- பேறு கால சர்க்கரை
ஒரு பெண் கர்ப்ப காலத்தில், அதிக சர்க்கரை அளவால் பாதிக்கப்பட்டால் குழந்தையின் தோற்றத்திலும் அதன் உடல் எடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதிக சாக்லேட், இனிப்பு வகைகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் உகந்ததல்ல. அதிலும் குறிப்பாக, ஏற்கெனவே ஜெஸ்டேசனல் டயாபட்டிக்ஸ் எனப்படும் கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை ஆகாது. தாயின் உடலில் அதிக சர்க்கரை அளவு, குழந்தையின் உடலில் அதிக கொழுப்பை சேர்த்து பருமன், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
- காற்றின் தரம்
கர்ப்பிணி சுவாசிக்கும் காற்றின் தரம் மிக மோசமாக இருந்தால் இதன் மூலம் குழந்தையின் உடல் எடை பாதிக்கும். குழந்தைக்கு சேர வேண்டிய வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளை கர்ப்பிணிகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவு மற்றும் குழந்தையின் உடல் எடையில் ஏற்படும் பாதிப்பை குறைக்க வாய்ப்புள்ளது
- தினமும் பால்
கர்ப்பிணிகள் தினமும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கப்களில் பால் பருக வேண்டும். இது கருவில் உள்ள குழந்தைகளின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு அதிக அளவு உதவும். தினமும், அவ்வாறு பால் கொடுத்தவர்களின் குழந்தைகளுடைய எடை சராசரியாக இருந்ததாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் பின்வரும் பல காரணிகளும் குழந்தையின் உருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
- அதிக காபி
காபியில் உள்ள கேஃபைன் என்ற பொருள் நஞ்சு கொடியில் விரைவாக உறிஞ்சப்பட்டு விடுமாம். இதனால் தினசரி காபி பருகும் கர்ப்பிணிகளின் கருவில் உள்ள குழந்தைக்கு எடை குறைவாகவே பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
- வேர்க்கடலை
பேறு காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. இது ஒரு குழந்தை பிறந்த பின், அவருக்கு வேர்கடலை ஒவ்வாமை அதாவது பீனட் அலர்ஜி உள்ளிட்ட நட்ஸ் வகைகளால் ஏற்படும் அலர்ஜியை குறைக்கலாம்.
- அதிக புரதம்
குழந்தையின் தலை முடி வளர்வதற்கு புரதச்சத்து அவசியமாகிறது. 14 அல்லது 15 வது வார கருவாக இருக்கும் போது குழந்தைக்கு முடி வளர தொடங்குகிறது. எனவே அத்தகைய காலகட்டம் முதல் புரோட்டின் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தையின் முடிக்கும் நல்லது. அது தவிர புரதம் நிறைந்த ஒரு முட்டையை உட்கொண்டு வந்தால் குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும் எனக் கூறப்படுகிறது
- மது
கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்துவது ஃபெடல் ஆல்கஹால் சின்ரோம் என்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இது கருப்பையில் வழங்கும் வளரும் குழந்தையின் முக அமைப்பு மற்றும் உருவ அமைப்பில் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றலும் தாய் மதுபானம் அருந்தும் போது பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிக தூர பயணம்
விமானத்தில் அதிக நேரம் பயணம் செய்கையில் குழந்தைக்கு கதிர்வீச்சு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். இதனாலும் கூட குழந்தையின் உடல் தோற்றம் பாதிக்கப்பட கூடும் என்று கணிக்கப்படுகிறது. இவை தவிர வேறு என்னென்ன விஷயங்களை பேறு காலத்தில் செய்யக்கூடாது என்பதை உங்களது அடுத்த மருத்துவ பரிசோதனை சமயம் மருத்துவரிடம் கேட்க மறந்து விடாதீர்கள்.
இதுபோன்ற சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ள “த காரிகை“-யின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள். . .