பெண்களுக்கான முதல்வர் திட்டங்கள் என்னென்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் பொறுப்பேற்றது முதல் பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள்
இலவசப் பேருந்து
தேர்தல் அறிக்கையில மக்களைக் கவர்ந்த ஒரு அறிவிப்பு. பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் 5 அரசாணைகளில் இலவச பேருந்தும் ஒன்று. இதனால் சாதாரண பேருந்துல பணிக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் ஒரு மாதத்துக்கு ரூ.756-லிருந்து ரூ.1,012 வரை ஆகும் பேருந்து கட்டண செலவை சேமிப்பாக்க முடியும்.
மாணவிகளுக்கு கல்வி உதவி
அரசுப் பள்ளிகளில் 6 – 12ஆம் வகுப்பு படித்த மாணவிகள், உயர் கல்வியில் சேர்வது குறைவாக உள்ளது. தாலிக்கு தங்கம் வழங்குவதை விட, பெண்களின் எதிர்காலத்துக்கு படிப்பு தான் சிறந்த மூலதனம் என அறிந்த முதல்வர், உயர்கல்வியை முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வழங்கும் திட்டம் கொண்டு வந்தார்.
சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி
மு.க. ஸ்டாலினின் முதல் பட்ஜெட்டில் அதிகம் பேசப்பட்ட ஒரு திட்டங்களில் இதுவும் ஒன்று. டிசம்பர் 4 2021முதல் மார்ச் 31 வரை அனைத்து வகையான நிலுவைத் தொகையான ரூ. 2,755.89 கோடி கடனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பெண்களும் அர்ச்சகராகலாம்
1970-ல் கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அது 51 ஆண்டுகளுக்குப் பின் தற்போதைய முதல்வரால் அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, பெண்களும் அர்ச்சகராகலாம் எனவும் சட்டமும் இயற்றப்பட்டது.
குடும்பத்தலைவி பெயரில் வீடு
ஏற்கெனவே கலைஞர் தந்தை பெரியார் நினைவாகக் கொண்டு வந்த சமத்துவபுரம் திட்டத்தில் வீட்டுப் பெண்களின் பெயரிலேயே வீடு வழங்கப்பட்டது. அதைப் பின்பற்றி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வழங்கும் வீடுகளும் குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டது.
12 மாத பேறுகால விடுப்பு
ஏற்கெனவே 9 மாதங்களாக இருந்த பெண்களின் பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. தாய்மையின் முக்கியத்துவம் புரிந்து செயல்பட்டமைக்காக உயர்நீதிமன்றமும் பாராட்டிய திட்டம் இது. 12 மாதங்களுக்குப் பின்பும் குழந்தையை கவனிக்கும் பொருட்டு விடுப்பு எடுத்தால், அது சம்பளமில்லா பேறு கால விடுப்பாக கருதப்படும்.
வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி
பெண்கள் நிதி சுதந்திரம் பெற்று வாழ வகை செய்யும் படி கொண்டுவரப்பட்ட இத்திட்டம் பெண்கள் தாமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படுத்தியது. 31,321 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. ரூ.20,479 கோடி கடன் வழங்கப்பட்டது. வேலை தேடுவோருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
சாலைப் பாதுகாப்பில் பெண் காவலருக்கு விலக்கு
கடினமான சாலைப் பாதுகாப்புப் பணிகளுக்கு பதில், வேறு பணிகளை பெண் காவலருக்கு வழங்கலாம் என மு.க.ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார். சாலையில் பந்தோபஸ்து உள்ளிட்ட பணிகளில் இருக்கும் போது பெண்கள், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும், மாதத்தின் சில நாட்களில் சங்கடமான நிலை இருப்பதாலும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1,000
2021-லயே அறிவித்தாலும் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றாத திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் எதிர்கட்சிகளால் விமர்சனத்துக்கு ஆளாகும் இத்திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 thought on “பெண்களுக்கான முதல்வர் திட்டங்கள் என்னென்ன?”
Comments are closed.