குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அறிவித்து முதலமைச்சரானவர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதை நிறைவேற்ற வில்லை என எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது தமிழக அரசு.

சட்டப்பேரவையிவ் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டதும், அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் கெத்தான மிடுக்குடன் அமர்ந்து புன்முறுவல் பூக்க மேசையைத் தட்டி வரவேற்றார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் இத்திட்டம் அமல் படுத்த படலாம் என கூறப்பட்டது. ஆனால் கலைஞரின் நூற்றாண்டு விழாவாகவும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவுமான செப்டம்பர் 15-ம் தேதி முதல் இத்திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

வரும் நிதியாண்டு முதல் அமலாகும் இத்திட்டத்தால் அரசுக்கு 7000 கோடி ரூபாய் செலவாகும். இருப்பினும் சமுதாயத்தில் சரி நிகர் சமானமாய் இருக்கும் பெண்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காக தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டபல்வேறு பிரச்னைகளால் தவித்து வரும் மகளிருக்கு இந்த உரிமைத் தொகை மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாரெல்லாம் உதவித் தொகைக்கு தகுதி ?

PHH, PHAAY என்ற ரேஷன் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும்,வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு இந்த ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வங்கி கணக்கில் செலுத்தப்பட வாய்ப்புள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் உதவித்தொகை வாங்கினாலும், அப்பெண்களுக்கு குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே பொங்கலுக்கு மட்டும் ரூ.1,000 ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இத்திட்டம் மாதந்தோறும் அமலுக்கு வருவதை நினைத்து பெண்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Facebook
Instagram
YOUTUBE