மீண்டும் தமிழ்நாட்டு அரசுப்பள்ளி கண்டெடுத்த வைரம்
இஸ்ரோ ஆதித்யா L1 இயக்குனர் நிகர் ஷாஜி
சந்திரயானை 3-யின் ரோவர் நிலவில் வெற்றிகரமாகக் களமாடிக் கொண்டிருக்கிறது. இது உலக நாடுகளின் கனவுத்திட்டப் பட்டியலில் இருந்து இந்தியா சாதித்த ஒரு சாதனையாக உள்ளது. ஆனால், அதை விட சில உலக நாடுகளின் கனவுத் திட்டப் பட்டியலில் இல்லாத, பலரும் நினைத்துப் பார்க்காத ஒரு திட்டம்தான் ஆதித்யா L1. அந்த டிரெண்டிங் திட்டத்தின் சாதனை இயக்குநராக இருக்கும் நிகர் ஷாஜி என்ற விஞ்ஞானி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
வெற்றிகரமாக நிலாவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 திட்டம், சந்திரயான் 1, சந்திரயான் 2 என மூன்று திட்டங்களின் இயக்குநர்களும் தமிழர்கள் என ஏற்கெனவே நம் மக்கள் மார்தட்டி பெருமைகொள்ளும் தருணம் இது. இந்த பூரிப்புக்கு மணி மகுடமாக, ஆதித்யா திட்டத்திலும் தமிழரே தலை வகித்திருப்பது தமிழக மக்களுக்கு அலப்பறிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த நிகர் ஷாஜி?
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த நிகர் ஷாஜியின் இயற்பெயர் நிகர் சுல்தானா. இவரது தந்தை ஷேக் மீரான் ஒரு விவசாயி. தாய் ஜைத்தூன் பீவி. இத்தம்பதியின் 2 வது மகள்தான் நிகர் ஷாஜி.
மீண்டும் அரசுப்பள்ளி கண்டெடுத்த வைரம்
பள்ளி காலத்திலிருந்தே படிப்பில் படுசுட்டி. செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். எப்போதுமே தேர்வுகளில் நிகருக்கு நிகர் யாருமில்லை. முதலிடம் தவிர பேறு பேச்சே இல்லை. 1978 – 79 கல்வியாண்டில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 433 மதிப்பெண். அந்த பள்ளி அளவிலும் கல்வி மாவட்ட அளவிலும் அதுவே அதிக மதிப்பெண்ணாக இருந்தது. 1980 – 81 கல்வியாண்டில் 12 ஆம் பொதுத்தேர்வில் 1008 மதிப்பெண்கள் பெற்ற நிகர் ஷாஜி பள்ளி அளவில் முதலிடம். உயர்கல்விக்காக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல். பின், உலக புகழ்பெற்ற பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பு படித்தார்.
விஞ்ஞானியானது எப்படி?
படிப்பை நிறைவு செய்த பின் நிகர் ஷாஜிக்கு இஸ்ரோவில் பணி கிடைத்தது. இஸ்ரோ மட்டுமின்றி, அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட பல நாடுகளின் விண்வெளி ஆய்வில் பயிற்சியும் சிறப்பான பணி அனுபவமும் பெற்றிருக்கிறார்.இவரழ கணவர் பெயர் ஷாஜகான். துபாயில் பொறியாளராக உள்ளார்.
மகனும் விஞ்ஞானி
நிகர் ஷாஜியின் மகனும் ஒரு விஞ்ஞானிதான். முஹம்மது தாரிக் எனப்படும் அவர் நெதர்லாந்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். தமிழகத்தின் தென்காசியில் பிறந்த இவரை தென்காசி மக்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் கொண்டாடுகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.