வாய் நம நம என்று இருக்கிறதா? தேங்காய் பர்பி செய்யலாம்

சிலருக்கு பிரஷ் செய்தவுடன் ஏதேனும் இனிப்பு சாப்பிட தோன்றலாம். சிலருக்கு மதிய உணவு சாப்பிட்ட உடனே ஏதேனும் இனிப்பு சுவைத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றலாம். ஒரு சிலரோ மாலை நேரத்திற்கு காரமாக சூடாக ஏதும் சாப்பிடாமல் இனிப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கமும் கொண்டிருப்பார்கள். அது மாதிரி வித்தியாசமான பழக்கங்களை கொண்டவர்களுக்கான ரெசிபி தான் இது. வாய் ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும் என நமநமத்தால் இதை சட்டுபுட்டுன்னு செஞ்சு சாப்பிடலாம்.

இதற்கு வீட்டில் இருக்கிற தேங்காய், சர்க்கரை, நெய் மட்டும் போதும். வெறும் பத்து நிமிடங்களில் தேங்காய் பர்பி விரைவாகவும் எளிதாகவும் செய்து விடலாம். .

தற்போது அதற்கு தேவையான பொருட்கள் என்னென்னவென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நன்கு துருவிய தேங்காய் ஒரு கப்

நெய் தேவையான அளவு

சர்க்கரை ஒரு கப்

முந்திரி / பாதாம் / நிலக்கடலை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்

எப்படி செய்வது?

தேங்காய் பர்பி செய்ய தேங்காய் துருவும் போது தேங்காயின் ஓட்டு பகுதியை ஒட்டிய கருப்பு பகுதி சேராமல் துருவ வேண்டும். அப்போதுதான் தேங்காய் பர்பி வெண்ணிறத்தில் பார்க்கவே சுவைக்க தோன்றும் வகையில் இருக்கும்.

ஒரு தட்டில் நெய்யை தடவி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய் பர்பி செய்ய அடிப்பகுதி கனமான பாத்திரமாக இருக்க வேண்டும்

அடுப்பு சமைத்து முடிக்கும் வரை சிம்மில்தான் தீ எரியவிட வேண்டும்.

அந்த பாத்திரத்தில் துருவிய தேங்காயையும் ஒரு கப் சர்க்கரையையும் போட்டு கைவிடாமல் கிளற வேண்டும்

முதலில் கெட்டியாக தான் தேங்காய் பர்பி வரும் அதை பார்த்து தண்ணீர் ஏதும் ஊற்றி விடாதீர்கள்.

சற்று நேரத்தில் சர்க்கரை உருகி சற்று நீர்த்த தன்மையுடன் வரும்.

இதை அடுத்து, ஓரப் பகுதிகளில் நுரை போன்ற பபுள்ஸ் உருவாகும்.

தொடர்ந்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க அனைத்து இடங்களிலும் அந்த பபுள்ஸ் தென்படும்.

இந்த சமையல் முழுவதுமே மிகவும் சிறிய தீயல் அதாவது சிம்மில் வைத்து தான் செய்ய வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம். இல்லாவிட்டால் கருகிய வாடை வந்துவிடும்.

நுரை வர ஆரம்பித்தவுடன் சற்று ஏலக்காய் தூள் போட்டு கிளறி விடவும்.

ஒரு சில நெய்யில் வறுத்த உடைத்த வேர்க்கடலையை இதில் சேர்ப்பார்கள்.

அப்படியே எடுத்து அந்த நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி விட வேண்டும்

தட்டை எடுத்து எடுத்து கீழே தட்டி தட்டி வைக்க நடுப்பகுதியில் கேப் இல்லாமல் அழகான வடிவத்தில் வரும்.

சற்று சூடாக இருக்கும் போது கத்தியை வைத்து கீத்து போட்டுக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் முந்திரி/ பாதாம் /பிஸ்தா உள்ளிட்டவற்றை நறுக்கி டாப்பிங்ஸ் போல தூவிக் கொள்ளலாம்

இதை அடுத்து சூடு ஆறிய பின் அதை சிறு சிறு துண்டுகளாக வெளியே எடுத்து பரிமாறினால் தேங்காய் பர்பி ரெடி

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE