பெற்றோர்களே உஷார்! சொத்து தான பத்திரத்தில் இந்த வார்த்தை மிக மிக மிக அவசியம்.
ஒவ்வொரு தாயும் தகப்பனும் தங்களது வாழ்நாள் முழுக்க உழைத்து சேமித்த பணம் அனைத்தும் தங்களது பிள்ளைகளுக்கு தான் என்று வாழ்வார்கள்.
அதற்காக எவ்வளவு பசியோடு இருந்தாலும், வெறும் டீயை மட்டுமே குடித்து வாழ்க்கையை ஓட்டிய பெற்றோர்கள் தான் தமிழகத்தில் ஏராளம்.
தனக்கென அந்த டீயோடு ஒரு போண்டா பஜ்ஜி கூட வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிரப்ப அவர்களுக்கு மனம் வராது. அப்படியே வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பலகாரம் கொடுத்தால் கூட அதனை பொட்டலமாக மடித்து வீட்டுக்கு வந்து பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு அவர்கள் ரசித்துச் சாப்பிடுவதை அழகு பார்ப்பார்கள்.
அப்படிப்பட்ட பிள்ளைகள் கடைசி காலத்தில் சோறு போடவோ, தயங்குவதோ, கணக்குப் பார்ப்பதோ, திட்டும் நிலையோ கூட ஏற்பட்டுவிடுவதுதான் கொடுமை.
ஆனால் எவ்வளவுதான் பார்த்து பார்த்து வளர்த்தினாலும் பணம் சொத்து என்ற விஷயம் பிள்ளைகளின் மனதில் பல நஞ்சுக்களை விதைத்து விடுகிறது.
நீங்கள் பாரபட்சம் காட்டுவதாக கூட அவர்கள் நினைத்து விட இந்த சொத்து அல்லது பாகப்பிரிவினை கடும் மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகிறது.
முதுமை காலத்தில் சொத்துக்களை சேர்த்து பல பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பெரும்பாலும் சந்திக்கும் இது ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனையாக தான் உள்ளது.
சொத்துக்களை எழுதிக் கொடுக்கும் வரை அம்மா அப்பா என உரிமை கொண்டாடி வாழும் சில பிள்ளைகள், அதுவும் வெகு சில பிள்ளைகள் சொத்துக்களை எழுதிக் கொடுத்த பின், பச்சோந்தி போல நிறம் மாறி அவர்களை கொடுமைப்படுத்தும் சூழலும் ஆங்காங்கே தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தகைய பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வந்து கதறுவதை பலமுறை நாமும் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.
அப்படி பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுக்கு சட்டம் என்ன சொல்கிறது? என்பதை “த காரிகை’ உங்களுக்கு வழங்குகிறது.
சென்னை மாநகர காவல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது அதில் பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 பிரிவு 23 ஐ சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளது.
பிள்ளைகளாக பிறந்து விட்டார்கள் என்பதற்காக மட்டும் அவர்களுக்கு அந்த சொத்துக்களை பெற்றோர் கொடுப்பதில்லை. இந்த சட்டப்படி பெற்றோர்களுக்கு அடிப்படை வசதிகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் உத்தரவாதத்துடன்தான் ஒரு சொத்தானது பிள்ளை அல்லது அல்லது உறவினர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒருவேளை சொத்துக்களை பெற்றுக் கொண்டவர் அதனை செய்ய தவறினால், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால், அந்த சொத்து பரிமாற்றமானது செல்லாது என தீர்ப்பாயத்தால் அறிவிக்க முடியும் என்று கூறியுள்ளது.
சென்னை மாநகர காவல் துறை சுட்டிக்காட்டிய இந்த சட்டப்பிரிவின் கீழ் முதியோர்கள் தாராளமாக பிள்ளைகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்க முடியும்.
காவல்துறையில் சி எஸ் ஆர் அல்லது எஃப் ஐ ஆர் நகல் கொடுக்க மறுத்தால் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால் சப் கலெக்டர் இடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ புகார் அளிக்கலாம்.
அப்படி புகார் அளிப்பதன் மூலம் சொத்துக்களை எழுதி மாற்றிய பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வைக்க முடியும்.
ஆனால் அதில் ஒரு சில சிக்கல் உள்ளது. அதையும் ‘த காரிகை’ உங்களுக்கு விளக்குகிறது.
பல முதியவர்களும் தங்களது வயதான காலத்தில் பிள்ளைகள் தங்களை கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் இருப்பார்கள். எனவேதான் சொத்தை தானமாக எழுதிக் கொடுக்கிறார்கள்.
எனவே அந்த பத்திரத்தை பதிவு செய்யும்போது ஒரு வார்த்தையை அவர்கள் தவறாமல் குறிப்பிட்டிருந்தால் உடனடியாக சொத்தை பெற்றோர் மீட்க முடியும்.
சொத்தை தானமாக எழுதிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் தங்களது பத்திரப்பதிவில் கவனமாக இருக்க சில வார்த்தைகளை கையாள வேண்டும்.
“அதில் அன்பின் வெளிப்பாட்டால் இந்த சொத்தை எழுதி வைப்பதாக” குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இதனை சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளது.
பிள்ளைகள் மீதான பாசத்தின் காரணமாக கடைசிவரை பல பெற்றோர்களும் சொத்துக்களை திருப்பி கேட்காமல் அவர்கள் தரும் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் சூழல் உள்ளது.
ஒன்று பத்திரம் மாற்றிக் கொடுக்கும் போது ஒரு சில விதிகளை, நிபந்தனைகளை முன்வைத்து அந்த சொத்தை எழுதி வைப்பதாக எழுத்துப்பூர்வமாக குறிப்பிட வேண்டும். அல்லது அன்பின் வெளிப்பாட்டால் எழுதி வைப்பதாக அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இந்த 2 விதங்களில் ஏதாவது ஒரு விதத்தில் ஆவணத்தில் குறிப்பு இருந்தால் சொத்தைப் பெற்றோர்கள் மீட்க முடியும். 2 விதிகளுமே இல்லாமல் தனது சொத்தை தானமாக எழுதி வைக்கிறேன் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தால் சொத்துக்களை மீட்பது சற்று கடினம் ஆகும்.
அந்த ஆவணத்தில், ‘நான், எனது கணவன்/மனைவி வாழும் காலம் முழுவதும் எங்களை பராமரிக்கவும், எங்களுக்கான பாதுகாப்பு, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட எல்லா செலவுகளையும் மகன்/மகள் ஏற்றுக்கொள்வதாக அளித்த உறுதியின் பெயரில்தான் இந்த சொத்தை தானமாக கொடுக்கிறேன். இதனை மீறும் பட்சத்தில், சொத்தை நான் திருப்பிவாங்கிக்கொள்வேன்’ என்ற வாக்கியத்தை எழுதியிருக்கவேண்டும். இது ‘conditional gift deed’ என்று வகைப்படுத்தப்படும்.
முதியவர்கள் பாமரிப்பின்றி இருப்பது குறித்த தகவலை பொதுமக்கள் இலவச உதவிஎண் (14567) மூலமாக பதிவு செய்யமுடியும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.