பொரி உருண்டை இவ்வளவு சிம்பிளா ?

எவ்வளவு பெரிய மனிதர்கள் என்றாலும் பொரி உருண்டையை பார்த்தால் சிறு குழந்தையைப் போல மாறிவிடுவார்கள். அதிலும் குறிப்பாக 90’ஸ் கிட்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களது பால்ய கால நினைவுகள் அவர்களுக்குள் அலையாடலாம். அவர்கள் வாழ்ந்த ஊரிலே இருந்தாலும் அல்லது வெளிநாட்டில் வசித்தாலும் கூட இந்த பொரி உருண்டையை அடிக்கடி சாப்பிடும் வாய்ப்பு கிடைக்காது.

ஏதேனும் கடைகளில் பார்த்தால் விரும்பி வாங்கி சுவைப்பார்களே தவிர அதை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம் என்று பலருக்கும் தோன்றுவதில்லை. பொதுவாக பொரியை வறுத்து கூட வீட்டில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக பள்ளிக்கு கூட கொடுத்து விடுவார்கள். ஆனால் பொரி உருண்டை என்பதை கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு.

ஆனால் பொரி வறுப்பதை விட பொரியை உருண்டையாக்கி இனிப்பு லட்டு போல செய்வது அவ்வளவு எளி.து என்பதை நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனவே செய்தே பாருங்களேன். பொரி உருண்டைக்கு தேவையான பொருட்கள் அதிகம் இருக்குமோ என்றெல்லாம் என்ன வேண்டாம் வெறும் இரண்டே பொருட்கள் தான். ..

அதை வைத்து கிரிஸ்பியான பொரி உருண்டை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பொரி

வெல்லம்

எப்படி செய்வது?

முதலில் வெல்லத்தை பொடி பொடியாக துருவியோ அல்லது மிக்ஸியில் பொடியாக்கியோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கரைக்க வேண்டும்.

அதனை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். குப்பை, தூசி, கசடுகள் இருக்கலாம்.

மற்றொரு பாத்திரத்தில் வடித்த வெல்ல நீரை ஊற்றி காய்ச்ச வேண்டும்.

முதலில் நுரை பொங்கி வரும் இதை எடுத்து அந்த வெல்லத்தை கரண்டியில் எடுத்து ஊற்றி வேண்டும்.

அப்படி ஊற்றினால் அதன் கடைசி சொட்டு கம்பி போல நீளமாக சொட்டி அதன் பின் கீழே விழ வேண்டும்.

இந்த கம்பி பதம் பார்க்க தெரியாதவர்கள் பக்கத்தில் ஒரு பவுலில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த பவுலில் உள்ள தண்ணீரில், வெல்லப்பாகை சசொட்டினால் அது நீரில் கரையாது இருக்கும்.

அதை கையில் எடுத்தால் மிட்டாய் போல இருக்கும்.

அழுத்தி பார்த்தால் கடினமாகவும் மிருதுவாகவும் இல்லாமல் சீராக இருக்க வேண்டும்.

இதுதான் சரியான பதம் என்று அர்த்தம்.

இந்த பதம் மீறி கடினமாக இருந்தால் ஒன்று பொரி உருண்டையை கடிக்கும் போது பல் போய்விடும்.

அல்லது லேசாக அந்த பாகு கையில் உடைபட்டால் பொரி உருண்டையும் எளிதில் உடைந்து போய்விடும்.

இந்த நேரத்தில் பொரியை ஒரு 2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.

காய்ச்சிய வெள்ளப் பாகுக்குள் பொரியல் போட்டு நன்றாக கிளற வேண்டும்,

தேவைப்பட்டால் ஏலக்காய் தூள் போட்டுக் கொள்ளலாம்.

அதில் பொட்டுக்கடலை போடுவதும் ஒரு ஆப்ஷன் தானே தவிர அவசியமில்லை.

பின்பு அந்த பாத்திரத்திலே வைத்து கையில் தண்ணீரை ஊற்றி ஈரம் ஆக்கிக் கொள்ளவும்.

மிருதுவாக பொரியை உருண்டை பிடிக்க வேண்டும்.

இதனை அறையின் சாதாரண வெப்ப நிலைக்கு ஆறிக் கொண்டு வந்தபின் எடுத்து சம்படம் அல்லது காற்று புகாத ஒரு பாக்ஸில் போட்டு வைத்தால் அடிக்கடி எடுத்து ஸ்னாக்ஸ் ஆக கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமின்றி தெய்வத்துக்கு படைக்கவும் ஏற்ற பொருள் இந்த பொறி உருண்டை. குறிப்பாக கிருத்திகை நாட்களிலோ, கார்த்திகை தீபத்தன்றோ முருகனுக்கு பொரி உருண்டை படைக்கலாம்.

அனைத்து உருண்டைகளையும் பிடிப்பதற்கு முன்பாக உருண்டைக்கான பாகு கெட்டியாகிவிட்டால் அடுப்பை பற்ற வைத்து மிதமான சூட்டில் வைத்து அதை லேசாக உருக்கி கொள்ளவும். அதன்பின் உருண்டை பிடித்தால் சரியாக வரும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE