தீபாவளி வேறு நெருங்குகிறது. வீட்டில் உறவினர்கள் வர வாய்ப்பு உண்டு. பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பலகாரம் கொடுத்து வாழ்த்து சொல்லும் போது, நாம் மட்டும் கடையில் வாங்கியதைக் கொடுத்தால் மானமே போய்விடும். எனவே, வீட்டிலேயே பலகாரம் செய்து நமது குழந்தைகளுக்கும் ஆரோக்கியமாக ஏதேனும் சமைத்துக் கொடுத்தால் அவர்கள் ருசித்துச் சாப்பிடும் அழகை ஒவ்வொரு தாய்மாரும் ரசிக்கத்தான் செய்வார்கள். தீபாவளிப் பலகாரம் அதிகமாக செய்யும் போது அதை பெண்கள் மட்டும் செய்ய வேண்டியதில்லை. ஆண்கள் கூட வீட்டில் பலகாரம் செய்து கொடுக்க உதவி அசத்தலாம்.

இன்னமும் கூட சில வீடுகளில் தீபாவளிக்கு பலகாரம் செய்யும் போது தம்பதியர் ஒன்றாக சேர்ந்து சமைத்து தனது குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்வது தமிழர்களின் பழக்க வழக்கமாகவே உள்ளது.

பக்கோடா என்றால் எண்ணெயில் பொறித்த ஒரு உணவு தின்பண்டமாகும். அதுவும் ரிப்பன் பக்கோடா என்பது மிகவும் மெலிசாகவும் மொறுமொறுவென்று நறுமணம் வீசும் வகையிலும் இருந்தால் அள்ளி அள்ளி சாப்பிட சாப்பிட தீர்ந்து கொண்டே இருக்கும்.

முறுக்கு கிடைக்க முடியாத வயதானவர்கள் கூட இதனை எளிமையாக கடித்து நொறுக்கும் அளவுக்கு மிக மெலிசாகவும் மொறுமொறுவென்றும் ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது? என்று பார்க்கலாம். இது தீபாவளி மட்டுமல்ல நவராத்திரி யுகாதி சங்கராந்தி, பொங்கல் என விசேஷ நாட்களில் செய்து அசத்தலாம். நாக்குக்கு என்ன நாள் கிழமையா தெரியும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும் இந்த ரெசிபி உங்களுக்கு உதவும்.

செய்முறை

கால் கப் வறுத்த கடலையை மிக்ஸியில் அரைத்து நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும்/

அதை ஒரு பவுலுக்கு மாற்றி விட்டு ஒரு கப் அரிசி மாவு கால் கப் கடலை மாவு சேர்த்து சலித்துக் கொள்ளவும் இல்லாவிட்டால், முறுக்கு பிழியும் பாத்திரத்தில் அது சிக்கிக் கொள்ளும்.

கால் டீஸ்பூன் சீரகத்தை நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும். 1 முதல் ஒன்றரை டேபிள் ஸ்பூன் எள்ளு, கால் முதல் முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் நன்றாக கலந்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சூடு செய்து அந்த மாவில் ஊற்றவும்.

எண்ணெய் சூடாக இருக்கும் போது ஸ்பூன் வைத்து கிளறி விடவும். ஆறியபின் கையால் பிசைந்து மாவு பதத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.

மாவு கையில் ஒட்டாத படி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

முறுக்குப் பிழியும் மோல்டில் எண்ணெய் தடவி அந்த மாவை உருட்டி போட்டு பிழிந்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு சிறிய துண்டு மாவை எண்ணெயில் போட்டு பொறிகிறதா என்று பார்க்கவும்.

எண்ணெயில் போட்டவுடன் அது மேலே எழும்பி வந்து விட்டால் தான் எண்ணெய் சரியான பதத்திற்கு வந்துள்ளது என்று அர்த்தம்.

அதுவே பிரவுன் நிறத்தில் மாறிவிட்டால் என்னை மிகவும் சூடாகி விட்டது என்று அர்த்தம்.

எனவே எண்ணெய் சற்று சூடு குறையும் வரை காத்திருந்து அதன் பின்பு பிழிந்த ரிப்பன் பக்கோடாவை அதில் போடவும்.

போட்டதும் திருப்பி விடாமல் சிறிது நேரம் கழித்து திருப்பி விட்டு மீடியம் ஹை ஃபிளைமில் வைத்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்

எண்ணெய் அதிகம் இருந்தால் அதை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் உறிந்த பின்பு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ளவும்.

டிப்ஸ்

ரிப்பன் பக்கோடா செய்ய வறுத்த கடலை என்பது மிகவும் முக்கியமான சேர் பொருளாகும். அப்படி பொட்டுக்கடலையை வறுத்து அதில் முறுக்கு, பக்கோடா செய்து பார்த்தால் அது அதிக எண்ணெய் இழுக்காமல் இருக்கும்.

அதையே அதிகமாக போட்டுவிட்டால் அதன் டெக்ஸர் என்ற தோற்றம் மாறிவிடும். இதை அடுத்து எண்ணெய் அதிகமாக இழுத்து அதிக நாள்வரை மொறுமொறுவென இல்லாமல் நமத்துப் போய்விடும்.

ஒரு பர்ஃபெக்ட்டான ரிப்பன் பக்கோடா செய்ய அரிசி கடலை மாவுடன் சீரகம் சிவப்பு மிளகாய் பொடி பெருங்காயம் எள்ளு ஓமம் உள்ளிட்டவற்றையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிவப்பு மிளகாய் க்கு பதில் பச்சை மிளகாயையும் இஞ்சியையும், பச்சை வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து அதை மாவுடன் கலந்து பிணைந்து, பிழிந்து ரிப்பன் பக்கோடா சுட்டால் நன்றாக இருக்கும்.

உங்களுக்குப் பிடித்த மசாலாவை கலக்கிய தண்ணீர் தெளித்து ரிப்பன் பக்கோடாவுக்கு மாவு பிசைய ருசி அல்டிமேட் ஆக இருக்கும்.

அரிசி மாவு இல்லாவிட்டால் வெறும் கடலை மாவு வைத்து மட்டும் கூட ரிப்பன் பக்கோடா பண்ணலாம்

இப்படி பல்வேறு வகையில் ரிப்பன் பக்கோடா செய்தால் 2வாரங்களுக்கு அது அறை வெப்ப நிலையில் வைத்தால் கூட மொறுமொறுவென இருக்கும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE