8 வயது முதல் 3000 குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவி. சத்தமின்றி சாதிக்கும் பாடகி யார்?
‘குழந்தைகளுக்கு நல்லது செய்வதற்காக கடவுள் என்னை ஒரு மீடியமாகப் பயன்படுத்துகிறார் அவ்வளவுதான்’ என தனது பிறவிப் பயனை ஒன்லைனில் சொல்லி அசத்துகிறார் பாலக்.
யாரிந்த பாலக்?
பாலக் முச்சல் ஒரு இந்தி மொழிப் பாடகி. இவர் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். 7 வயதாக இருக்கும்போதே கார்கில் வீரர்களுக்கு நிதி திரட்ட கடைத் தெருக்களுக்கும், வீடுகளுக்கும் சென்று பாட்டு பாடி இவரும் இவரது தம்பியும் சமூக சேவையில் ஈடுபட்டு வந்தனர். அப்போதே 25,000 ரூபாய் நிதி திரட்டி செய்திகளில் இடம் பிடித்த சிறுமியாக இருந்தவர் பாலக். ஒடிசா வெள்ள நிவாரண நிதியும் திரட்டினார்.
தூய சைவமான பாலக்கின் குடும்பத்தினர் மார்வாரி இனத்தைச் சேர்ந்தவர்கள். சிறு வயது முதலே அன்பும், கருணையும், பிறருக்கு செய்யும் சேவையும் தான் ஒரு மனிதனுக்கு அத்யாவசிய மனநிறைவையும், நிம்மதியையும் தரும் என பெற்றோரால் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட இவர்கள், தற்போதும் இதய நோயாளிக் குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்டி உதவி வருகின்றனர்.
எப்படி ஆரம்பித்தது?
பாலக் ரயில்களில் துணியைக் கொண்டு துடைக்கும் சிறார்களுக்கு உதவி வந்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள் சிலர் பாலக்கை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் பயிலும் லோகேஷ் என்ற சிறுவனுக்கு தீவிர இதய நோய் இருப்பதாகவும், நிதி திரட்ட உதவுமாறும் கோர, 2000-ஆவது ஆண்டு பாலக் கச்சேரி மூலம் 50000 நிதி திரட்டினார். அப்போது அவருக்கு வயது வெறும் 8.
இதைப் பார்த்த கார்டியாலஜிஸ்ட் மருத்துவர் ஒருவர் இலவசமாக லோகேஷ் -க்கு அறுவை சிகிச்சை செய்தார். திரட்டிய நிதி வீணாகக் கூடாது என்பதற்காக லோகேஷின் பெற்றோர் யாரேனும் ஏழைக் குழந்தைகளுக்கு இதய சிகிச்சைக்கு நிதி தேவைப்படுகிறதா? என செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்க 33 குழந்தைகளின் பெற்றோர், அணுகினர்.
குழந்தைகளின் நிலை கண்டு கண்கலங்கிப் போன பாலக், எல்லா குழந்தைகளுக்கும் உதவுவதாக வாக்குறுதியளித்தார். அடுத்தடுத்து நிதி திரட்ட கச்சேரிகளை நடத்தி
சமீபத்தில் 3000-ஆவது குழந்தையின் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அக்குழந்தையை அவர் நேரில் சென்று பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
இதன் பின்பு தான் பாலக் முச்சல் யாரென நெட்டிசன்கள் அவரைத் தேடி அறிந்து வாவ் சொல்ல ஆரம்பித்தனர்.
திரைப்பயணம்
ஏக்தா டைகர், ஆஷிகி 2, கிக், ஆக்சன் ஜாக்சன், எம்.எஸ்.தோனி. த அன்டோல்ட் ஸ்டோரி, கபில், பாகி ஆகிய படங்களில் பாலக் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
கச்சேரி
இசைக் கச்சேரிகளை கல்லா கட்டுவதற்கு என்றே நடத்தும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளனர். அதிலும், என் பாட்டை நீ பாடாதே, உன் பாட்டை நான் பாடமாட்டேன் என வாய்க்கா வரப்பு சண்டையெல்லாம் நீதிமன்றம் வரை சென்று கொண்டிருக்க இசைக் கச்சேரிகளில் 5 மணி நேரம் வரை தொடர்ந்து பாடி அதில் வரும் பணத்தை கொண்டு இதய நோயுள்ள குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவுகிறார் பாலக்.
“முன்பெல்லாம் ஒரு கச்சேரி நடத்தினால், ஒரு குழந்தைக்கு தான் ஆபரேசன் செய்ய முடியும். தற்போது, ஒரே கச்சேரியில் 13-14 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கான பணம் திரள்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே 3000 குழந்தைகளுக்கு ஆபரேசன் வெற்றிகரமாக நடந்துமுடிந்துவிட்டது. இன்னமும் எங்களின் சுமார் 400 குழந்தைகள் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளனர். அவர்களுக்கும் தாமதிக்காமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இசைக்கச்சேரிகளை முழு வீச்சில் நடத்தி வருகிறேன்” என்றார் புன்னகையுடன் பாலக்.