பெயில் ஆகப் போகும் பள்ளிக் குழந்தைகள். ஷாக் கொடுத்த அரசு
புதிய கல்விக் கொள்கையின்படி ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில், பெயில் ஆகும் மாணவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை தமிழ்நாட்டில் உள்ள CBSE பள்ளிகளிலும் அமலாகிறது. இதுகுறித்த விரிவான பார்வை இந்த தொகுப்பில்.
மாணவர்கள் பாஸ் ஆக வேண்டியதன் அவசியம் என்ன?
தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தின்படியும், தமிழக அரசின் கொள்கைகளின்படியும் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரையும் பெயில் ஆக்குவதில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் ஆகும் மாணவர்கள் மட்டுமே அதே வகுப்பில் மீண்டும் படிக்க வைக்கப்படுகின்றனர்.

15 வயதுக்கு கீழுள்ள மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இந்தக் கொள்கையை கடைபிடிக்கிறது. இத்திட்டத்தை ரத்து செய்து, அனைத்து வகுப்பிலும் மாணவர்களை பெயில் ஆக்கினால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதாவது, பெயில் ஆன மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வராமல் வேலைக்கு சென்றுவிடுவார்கள்.
மாணவர்கள் பள்ளிக்கு வருவதன் அவசியம்
காமராஜர் காலம் முதலே, சிறார்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கொள்கையை தமிழக அரசு கொண்டுள்ளது. இதற்காகத்தான் இலவச அரசுப் பள்ளிகள், மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், இலவச சீருடை புத்தகங்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், பள்ளிகளின் இடைநிற்றல் நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிகக்குறைவாக உள்ளது.
மத்திய அரசின் புதிய திட்டம் என்ன?
மோடி தலைமயிலான மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதனை தமிழக அரசு ஏற்காவிட்டாலும், பல மாநிலங்களில் அமலாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் CBSE பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகின்றன. இதனால், கல்வித்தரம் உயரும் என்று மத்திய அரசு நம்புகிறது.

புதிய கல்வித்திட்டத்தின் கீழ், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவும், அதில் சரியாக படிக்காத மாணவர்களை பெயில் ஆக்கவும் மத்திய அரசு வலியுறுத்துகிறது. இந்த முறையை தமிழக அரசு ஏற்காததால் பிரச்னை வெடித்துள்ளது.
பாஜக, திமுக தலைவர்கள் வாக்குவாதம்
மாணவர்களை பெயில் ஆக்கும் புதிய முறையால் கல்வித்தரம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. சரியாக படிக்காத மாணவர்களை ஆல்-பாஸ் செய்து அடுத்த வகுப்பிற்கு கொண்டு செல்வதால் என்ன பயன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேல்வி எழுப்பியுள்ளார்.

அதே சமயம், மாணவர்களின் கல்வித்தரத்தை தாண்டி அனைவரும் கற்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்று மாநில அரசு சொல்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலம் என்ன?
தற்போதைய நிலவரப்படி, CBSE பள்ளிகள்தான் இந்த புதிய பெயில் நடைமுறையை பின்பற்றவுள்ளன. அதில் பெயில் ஆகும் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒருவேளை இந்த நடைமுறை அனைத்து பள்ளிகளிலும் அமலானால், மாணவர்கள் பலர் பெயில் ஆகி பள்ளிப்படிப்பை இழக்க நேரிடும்.