சபாஷ் ஷர்மிளா! கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர்!
சிறுவயதில் சிறுமிகள் பலரும் பாண்டி, தொட்டாங்கல் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர்களைப் போல டயர் உருட்டி விளையாண்டார் ஷர்மிளா. தற்போது நிஜ வாழ்விலும் ஓட்டுனராக உருவெடுத்துள்ளார். அதுவும் கார், ஆட்டோ என்பதை கடந்து பயணிகள் பேருந்தையே இயக்கி சாதித்து வருகிறார்.
ஷர்மிளா, பேருந்து ஓட்டும் வீடியோ இதோ. . .
- சாதனைக்கு பாகுபாடில்லை
சாதிக்கத் துணிந்து விட்டால் எதுவும் சாத்தியமே! அதற்கு ஆண், பெண், ஜாதி, மதம், உயரம், நிறம் என எதுவுமே பொருட்டல்ல. திறமை உள்ளவரை நிச்சயம் உச்சத்துக்கு கொண்டு செல்லும் இந்த சாதனை.
- யார் இந்த ஷர்மிளா
பெரும்பாலான பெண் குழந்தைகள் தனது தந்தையையே ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளும். அதேபோல் ஷர்மிளாவுக்கும் ரோல் மாடல் அவரது தந்தை மகேஷ் தான். வடவள்ளியைச் சேர்ந்த இவர் 24 ஆண்டுகளுக்கு முன் மகேஷ்-ஹேமா தம்பதிக்கு பிறந்தார். ஆட்டோ ஓட்டுனர் ஆன மகேஷ், தனது மகளின் ஆர்வம் பார்த்து அவருக்கும் டிரைவிங் கற்றுக் கொடுத்தார். பின், சுய ஆர்வத்தின் பெயரில் கார் ஓட்ட பழகினார் ஷர்மிளா.
- பேருந்து ஓட்ட கற்றது எப்படி?
ஆட்டோ ஓட்டும் தொழிலை தந்தை இடம் கற்றுக்கொண்டு கேஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் ஆட்டோவுக்கு ஓட்டுனராக பணிபுரிந்தார் ஷர்மிளா. ஆனால், ஒவ்வொரு முறையும் சாலையில் தன்னை முந்தி செல்லும் பேருந்துகள் அவருக்கு ஒரு இலக்காகவே இருந்தது. எப்படியேனும் கனரக வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொண்டாக வேண்டும் என முனைப் பெடுத்தார். அதனையும் முறைப்படி ஓட்ட கற்றுக்கொண்டு, HMV என்ற ஹெவி மோட்டார் வெஹிக்கிலுக்கான லைசென்சையும் பெற்றார்.
- வாய்ப்பு கிடைத்தது எப்படி?
என்னதான் ஹெவி மோட்டார்ஸ் இயக்குவதற்கான லைசன்ஸ் பெற்றிருந்தாலும், ஷர்மிளாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், ஒரு பெண்ணை நம்பி, யாரும் கனரக வாகனங்களை இயக்கும் பணியை ஒப்படைக்கவில்லை. இவர் கனரக வாகனம் இயக்கும் தொழிலை கற்றுக் கொண்டு, பணிக்காக காத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் மகளிர் தின சிறப்பு செய்தியாக வெளியானது. இதைக் கண்ட தனியார் பேருந்து நிர்வாகம், ஷர்மிளா எனும் பெண்ணின் பேருந்து ஓட்டும் திறமையை நம்பி மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்தது. தங்களது நிர்வாக பேருந்தை நம்பி ஏறும் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலையும், பயணத்தையும் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில் ஷர்மிளாவை ஓட்டுனராக பணியமர்த்தியது.
- வியந்து போன மக்கள்
“படில நிக்காத பா, உள்ள வா” என ஒரு பெண் குரல் கேட்டதும் பயணிகள் அனைவரும், ஒரே நேரத்தில், ஓட்டுனர் இருக்கையத் திரும்பிப் பார்த்தனர். அப்போது அங்கு, பெண் அமர்ந்திருந்தது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். கியரை மாற்றி மாற்றி, இலகுவாக அவர் பேருந்தை இயக்குவது கண்டு மலைத்துப் போய் நின்றனர்.
- சக வாகன ஓட்டிகளின் ரியாக்சன்!
சோமனூர்-காந்திபுரம்-சோமனூர் வழித்தடத்தில் 20 A என்ற எண் கொண்ட பேருந்தை பெண் ஒருவர் ஓட்டி வருவதை, கண்ட பலரும் மீண்டும் ஒருமுறை அல்ல பலமுறை அவரை திரும்பிப் பார்த்து வியந்து சென்றனர். இது, ஷர்மிளாவுக்கு பெருமிதத்தை கொடுத்தது. ஆச்சரியத்துடன் ஷர்மிளாவுக்கு சக வாகன ஓட்டிகள் வாழ்த்துக்களையும் பரிமாறி சென்றனர்.
- போர் விமானம் ஓட்டும் பெண்கள்
அடுப்படியில் முடங்கிப் போன பெண்களின் வாழ்க்கை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று, சைக்கிள், பைக், கார், பேருந்து, ரயில், விமானம், போர் விமானம் என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டே செல்கிறது. தனக்கு வாகனம் ஓட்டத் தெரிந்தாலும், திருமணத்துக்கு பின் ஒரு சில கட்டுப்பாடுகளால், வாகனங்களை இயக்கத் தவறிய பெண்களுக்கு ஷர்மிளாவின் “The Karigai” கதை தூண்டுகோலாக அமையும் என நம்புகிறோம்.