மராட்டிய மாநில பாடபுத்தகத்தில் புதுக்கோட்டை மாணவிக்கு அங்கீகாரம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் தமிழ் பாட புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவியின் சமூக அக்கறை செயல்கள் பாடமாக இடம் பெற்றுள்ளது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள திருவள்ளுர் நகரைச் சேர்ந்தவர் மாணவி ஜெயலட்சுமி. தற்போது பி.ஏ.வரலாறு படித்து வந்தாலும், பதினோராம் வகுப்பு படிக்கும் போது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் சிறப்பாக பங்குபெற்று வெற்றியும் பெற்றார். அதன் தொடர்ச்சியாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வும் செய்யப்பட்டார் ஜெயலட்சுமி.

வெற்றி பெற்றும் போதிய நிதி இல்லாததால் தவித்து நின்ற மாணவிக்கு பலரும் உதவி கரம் நீட்டினர். அப்பொழுது ஜெயலட்சுமியின் பொருளாதார சூழல் அறிந்து “கிராமாலயா” என்ற தொண்டு நிறுவனம், மாணவி விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும் அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனால் பல நல் உள்ளங்களில் உதவியால் தனக்கு தேவையான தொகை முழுமையாக கிடைத்து விட்டதாக ஜெயலட்சுமி கூறிவிட்டார். இருப்பினும் மாணவிக்கு வேறு உதவி வேண்டும் என்றாலும் “கிராமாலயா” செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தது.

இதனை பயன்படுத்திக் கொண்ட மாணவி ஜெயலட்சுமி, தான் வசிக்கும் ஊரில் பலர் கழிவறை இல்லாமல் பல்வேறு சங்கடங்களை சந்திப்பதாகவும், தங்களால் முடிந்தால் வீட்டிற்கு ஒரு தனி நபர் கழிவறை கட்டி தர முடியுமா என கேட்டுள்ளார். மாணவியின் இந்த சமூக அக்கறையால் வியந்து போன கிராமாலயா நிறுவனம், அந்த கிராமத்தில் உள்ள 126 வீடுகளுக்கு கழிவறை கட்டி கொடுத்துள்ளது. இந்த செய்தி உள்ளுர் மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கியது. இதனால் மாணவி ஜெயலட்சுமிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் தான், மகாராஷ்டிரா மாநில பாடநூல் கழகம் மற்றும் பாடதிட்ட ஆய்வுக் கழகமும் மாணவி ஜெயலட்சுமியின் செயலை கௌரவப்படுத்த முன்வந்தது. மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் 7ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் “கனவு மெய்ப்படும்” என்ற தலைப்பில் 4 பக்கங்களுக்கு ஜெயலட்சுமியின் செயல்களை பாடமாக இடம் பெற செய்துள்ளது. இதை அறிந்த மாணவி ஜெயலட்சுமி மகாராஷ்டிரா மாநில பாடநூல் கழகத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். தனக்கு கிடைத்த உதவியை சுயநலத்திற்காக எடுத்துக்கொள்ளாமல், மனித நேயத்துடன் செயல்பட்ட ஜெயலட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE