தெரு நாய்களால் வரும் ஆபத்து. தடுப்பது எப்படி?
தெரு நாய்களை நாம் எப்போதும் ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை. ஆனால், உலகின் மிகவும் ஆபத்தான நோய் தெரு நாய்களின் மூலமாகத்தான் பரவுகிறது என்பதை நாம் அனைவரும் மறந்துவிடுகிறோம். அது என்ன நோய்? அதனை தடுப்பது எப்படி? ஆகியவை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகள்
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தெரு நாய்களால் தொந்தரவுக்கு ஆளாகாதவர்கள் இருக்கவே முடியாது. இரவில் தனியாக வருவோரை துரத்துவதும், சிறிய குழந்தைகளை கடித்து துன்புறுத்துவதும் தெரு நாய்கள் செய்யும் சேட்டைகளில் ஒன்று. அது மட்டுமல்லாது, சாலையில் குறுக்கும் நெடுக்கும் ஓடி வாகனங்களை விபத்துக்குள்ளாக்குவதும் தெரு நாய் தொல்லையாகவே பார்க்கப்படுகிறது.
தெரு நாய்களுக்குள் ஒளிந்திருக்கும் கொடிய நோய்
தெரு நாய்களால் பெரிதாக என்ன ஆகிவிடப் போகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அவை ரேபிஸ் என்ற கொடிய நோயை பரப்பக் கூடியவை. இந்த நோய்க்கு உலகெங்கிலும் சிகிச்சையே கிடையாது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இறப்பை சந்திக்க நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்.

ரேபிஸ் நோயில் இருந்து காப்பது எப்படி?
தெரு நாய்களால் பரவும் ரேபிஸ் நோய்க்கு சிகிச்சை இல்லையென்றாலும் தற்காப்பு நடைமுறைகள் உண்டு. நாய்க்கடி தடுப்பூசியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செலுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் ரேபிஸ் தொற்று உள்ள நாய் கடித்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு நோய் பரவாது. அல்லது, நாய் கடித்த சில நிமிடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் ரேபிஸ் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்.
ஏன் இந்த நாய்த் தொல்லை?
தெரு நாய்களை தடுக்க அரசு முயற்சி எடுத்து வந்தாலும், விலங்குகள் ஆர்வலர்கள் அதற்கு பல வகைகளில் தடை விதிக்கின்றனர். முன்பு போல நாய்களை பிடித்து செல்ல தற்போது அனுமதியில்லை. அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்க மட்டுமே அரசு அனுமதியளிக்கிறது. அதிலும், கருவுற்றிருக்கும் நாயை பிடிக்கக்கூடாது, குட்டிப் போட்டிருக்கும் நாயை பிடிக்கக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இதற்கு என்னதான் தீர்வு?
தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளை அறிந்த முதல்வர் ஸ்டாலின், இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதன்பின், நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
தெரு நாய்களுக்கு இனி கால்நடை பல்கலைக்கழகங்களில் கருத்தடை சிகிச்சை செய்யும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் அட்டகாசமும் குறையும் என்று நம்பப்படுகிறது.