இந்த லீவுக்கு ஊட்டிக்கு போறீங்களா? இதப் படிங்க

மூளையே உருகி வழியும் அளவு கொளுத்தும் வெயிலில் எங்காவது குளு குளு பிரதேசத்துக்கு 2 நாட்கள் சென்று வந்தால் இதமாக இருக்குமே எனத் தோன்றுகிறதா? அப்போது பலரும் புறப்படுவது ஏழைகளின் குலு மணாலியான ஊட்டி தான். அதில் முக்கியமாக 2 அம்சங்கள் நமது பயணத்தின் நாட்களை நிர்ணயிக்கும். ஒன்று பட்ஜெட். மற்றொன்று சீசன் சமயத்தில் ரூம்ஸ் கிடைப்பது.

Ooty Tourist spots!

முன்கூட்டியே ரிசார்ட் போன்ற இடங்களில் புக் செய்து சென்றால் சற்று நிம்மதியாக பொழுதைக் கழித்து வரலாம். ஆனால், ஒரே நாளில் ஊட்டியைச் சுற்றி விட்டு வரலாம் என நினைப்பவர்களும் உண்டு. அவர்கள் என்னவெல்லலாம் பார்க்கலாம், எங்கெல்லாம் சென்று வரலாம் என இங்கு படியுங்கள்.

தாவரவியல் பூங்கா

ஊட்டிக்குப் புறப்பட்டாலே நேரே வண்டிகள் சென்று நிற்பது இங்கு தான். சேரிங் கிராஸ் சாலையில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா. கோடை விடுமுறையை ஒட்டி குவியும் சுற்றுலாப் பயணிகளின் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஏராளமான மலர்கள் அங்கு கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும். இத்தனை வண்ணங்களா? இத்தனை வடிவங்களா? என ஒவ்வொரு பூவுமே ஆச்சர்யம் கொள்ளச் செய்யும். மிகவும் அமைதியான பறந்து விரிந்த பூங்காவில் நடந்து சென்று திரும்ப வரவே பசியாகிவிடும். எனவே, பிளாஸ்டிக், பாலிதீன்களில் அடைக்காத ஸ்னேக்ஸ்களையும், பிளாஸ்டிக் அல்லாத பாட்டிலில் தண்ணீரையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்.

தொட்டபெட்டா மலைச்சிகரம்

எட்டிப் பிடித்தால் கையில் தொட்டுவிடும் தூரத்தில் வானம்தான் இல்லை என்றாலும், மேகத்தை தொட்டு விளையாட சிறந்த இடம் தொட்டபெட்டா. மேகங்கள் நமக்குக் கீழே உலவி, தவழ்ந்து செல்லும். இங்கு உள்ள தொலைநோக்கி ஊட்டியின் மொத்த அழகையும் ஓரிடத்தில் இருந்து காண ஏதுவாக இருக்கும். உதகையின் உயரிய மலைச்சிகரமான இங்கு செல்ல தாவரவியல் பூங்காவில் இருந்து 5 கி.மீ., தூரமாகும். கோத்தகிரி சாலையில் டீ ஃபேக்டரியைக் கடந்தால் இங்கு செல்லலாம்.

ரோஸ் கார்டன்

தாவரவியல் பூங்காவில் ரோஜாக்களைப் பார்த்தாலும், ரோஜாவுக்கென பிரத்யேக கார்டன் இருப்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ரோஜாக்களின் நறுமணம் நமது மூளையில் இருந்து ஹேப்பி ஹார்மோனை சுரக்கச் செய்யும். தொட்டபெட்டா சாலையில் இருந்து பழைய அலங்கார் தியேட்டர் சாலையில் செல்லும் போது இந்த ரோஸ் கார்டன் வரும்.

ஊட்டி படகு இல்லம்

ஊட்டி படகு இல்லமானது ஏரியில் அமைதியாக சவாரி சென்றபடி இயற்கை அழகைக் கண்டறிய உதவும். குழந்தைகள் விளையாடி மகிழவும் ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் இங்கு உள்ளன. ஊட்டிக்கு பேருந்திலோ, ரயிலிலோ வருவோர் முதலில் கண்டு செல்ல வேண்டிய இடங்களின் பட்டியலில் அருகில் இருப்பது இந்த படகு இல்லம்தான்.

ஊட்டி கர்நாடகா பார்க்

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கர்நாடகா பார்க் ஊட்டி படகு இல்லம் அருகே 1 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. கர்நாடகா பார்க்கில் சுற்றி மகிழ்ந்து பொழுதைக் கழிக்கலாம்.

ஆளை மயக்கும் அவலாஞ்சி

நீங்கள் ஏற்கெனவே மேற்சொன்ன இந்த இடங்களுக்கு எல்லாம் அடிக்கடி சென்று வந்துவிட்டீர்கள் என்றால், அவற்றில் ஒன்றிரண்டை விடுத்து ஒரு நாள் பயணத்தின் பட்டியலில் இந்த சொர்க்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது அவலாஞ்சி. அமைதியான ஏரியையும் இயற்கையின் எழில் கொஞ்சும் இடமும் இங்கு புதைந்துள்ளது. பாலடா, இத்தலார், எமரால்டு வழியாக இங்கு செல்லாம். எமரால்டில் இருந்து 8 கி.மீ., பயணத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு கார், பைக் போன்ற வாகனத்தில் செல்வது நல்லது. கட்டண பார்க்கிங் வசதியும் உள்ளது.

ஜீப் சஃபாரி

கரடு முரடான பாதையில் த்ரில்லூட்டும் ஜீப் சஃபாரி இங்கு உள்ளது. ஆனால், உடமைகளையும், தின்பண்டங்களையும் குரங்குகளிடம் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. ஸ்னேக்ஸ் தொலைந்து போனால், “The Karigai” பொறுப்பல்ல😜. . .

முக்கியமான பின் குறிப்பு :-

ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா தேர்வலத்துக்காக ஏப்ரல் 21,2023 வரை முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் உதகை லோயர் பஜார் அல்லது மெயின் பஜார் மார்க்கெட் சாலையில் போக்குவரத்து மாற்றப்படலாம். மற்றொரு முக்கிய எச்சரிக்கை. நினைவிருக்கட்டும் ஊட்டியில் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள், பாட்டில்களுக்குத் தடை கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது. ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் கிடைப்பது அரிது. கிடைத்தாலும், அதிக விலையாகவோ, அல்லது 5 லிட்டர் பாட்டிலாகவோதான் கிடைக்க வாய்ப்பிருக்கும். மேட்டுப்பாளையத்திலேயே தண்ணீரை வாங்கியோ, நிரப்பியோ செல்லுங்கள். . . தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகிறது. “The Karigai

Facebook
Instagram
YOUTUBE