இத்தனை தீவிரவாதிகளை கொன்னாச்சா? இந்தியா அபீசியல் அறிவிப்பு
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்பு, தாக்குதல் தொடங்கப்பட்டது ஏன், பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்து அவர்கள் பேசியதன் முழு சாராம்சம் இதோ.

தீவிரவாதிகள் கொலை, முகாம்கள் நாசம்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூட்டாக இணைந்து மிகவும் முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது, பாகிஸ்தானில் அழிக்கப்பட்ட ராணுவ முகாம்கள் குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். அப்போது, சுமார் 9 தீவிரவாத முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்டதாகவும், அதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் உறுதிபட கூறினர்.

பாகிஸ்தானை தாக்கும் நோக்கம் இல்லை
தீவிரவாத முகாம்களை தாக்குவது மட்டுமே நோக்கம் என்றும் பாகிஸ்தான் மிலிட்டரியை தாக்கும் நோக்கம் இல்லையென்றும் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாள் இரவு முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், அடுத்த நாள் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

இந்தியாவில் உள்ள பொது மக்கள் மீதும், நகரங்கள் மீதும் பாகிஸ்தான் மிலிட்டரி நேரடி தாக்குதல் நடத்தியது. இதனால், வேறு வழியில்லாமல்தான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று என்று அவர்கள் கூறினர். இறுதியில் பாகிஸ்தான் நமது வழிக்கு வந்தது.
பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 35 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் தரப்பில் பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று காலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நமது நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். மதியம் 3 மணியளவில் இரு தரப்பில் இருந்தும் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்
போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து இரண்டு மணி நேரத்திற்குள் இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் கூறினர். நேற்றிரவு நடைபெற்ற அந்த தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அதேபோல, இன்று இரவு தாக்குதல் நடந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன?
தீவிரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில் மட்டுமே இந்தியா செயல்பட்டுள்ளதே தவிர, பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடங்கும் எண்ணம் இல்லை என்பது திண்ணமாகிறது. ஆனால், இனி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறினாலோ, தீவிரவாதத்துக்கு அந்நாடு துணை போனாலோ கடுமையான போர் தொடங்கும் என்பதை பிரதமர் மோடியும் ராணுவ அதிகாரிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.