யப்பா சாமி, இனி எவரெஸ்ட்-ட நாரடிக்காதீங்க. . . !
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது பலருக்கும் கனவாகவே இருக்கும். காரணம் அங்குள்ள மலையின் அழகும், குளிர்ச்சியும், சவாலான மலையேற்றமும்தான். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அத்துடன் புதிதாக இணைந்துள்ளது ஒரு அத்தியாவசியமான விதி.
எவரெஸ்ட் மலை ஏற செல்பவர்கள் தங்கள் மலத்தை அகற்றுவதற்கான மலம் சேகரிப்பு பைகளை கையோடு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அது.
அதை எடுத்துச் சென்றால் மட்டும் பத்தாது. கண்ட இடத்தில் அதை வீசாமல், திரும்ப முகாமுக்கு வரும்போது அடித்தளத்தில் உள்ள முகாம்களில் அதனை காண்பித்த பின்பு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உலகின் அழகிய உயரிய மலையாக கருதப்படும் எவரெஸ்ட் மலை துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளதாக கிராமப்புற நகராட்சி தலைவர் மின்மா சார்பாக கூறியுள்ளார்.
இந்த நகராட்சி தான் எவரெஸ்ட் பகுதியில் பெரும்பகுதியை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்னை?
வெப்பநிலையின் தீவிரம் காரணமாக எவரெஸ்டில் மனித கழிவுகள் முழுமையாக சிதையாமல் உள்ளது. இதனால் மனித மலங்கள் பாறைகள் மீது சிதறி கிடக்கின்றன. அது மலையேறுப்பவர்களுக்கு உடல்நல கோளாறு ஏற்படுத்தும் என்று தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே லோன்ச் சிகரத்தின் மீது ஏறுபவர்கள் அடித்தள முகாம்களிலேயே மலம் சேகரிக்கும் பைகளை வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மலையேறும் பருவத்தில் பெரும்பாலானவர்கள் முகாம்களிலேயே நேரத்தை செலவிடுவார்கள். அங்கு கூடாரங்களில் கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கும். கழிவறை பேரல்கள் மூலமும் சேகரிக்கப்படும்.
ஆனால் சற்று மேலே ஏற ஏற தனது பயணத்தை தொடங்கியவுடன் நிலைமை சற்று சிக்கலாக தான் இருக்கும். எனவே நிலத்தில் குழி தோண்டி அவர்கள் மலத்தை புதைப்பார்கள். ஆனால் மலையின் மீது ஏற ஏற நிலப்பகுதி குறைந்து பனியாக இருக்கும். எனவே அவர்கள் வெட்ட வெளியிலேயே மலம் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது இந்த துர்நாற்ற பிரச்சனை ஏற்படுகிறது. எனவே மலையேற செல்பவர்கள் மலத்தை சேகரிக்க மக்கும் உரங்களைக் கொண்ட கவர்களை கொண்டு வருகிறார்கள். இவற்றில் மலம் மக்குவதற்கு ஒரு சில வாரங்கள் ஆகும்.
மலையேறிகள் அதிகம் வருவதால் இங்கு குப்பை பெருகி பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதனால் சுமார் 3 டன் மனித கழிவுகள் சேர்ந்திருப்பதாகவும் மிகவும் உயரிய பகுதியில் இருக்கும் போது அதனை அப்புறப்படுத்த முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மலையேறும் சீசன் மார்ச் மாதம் துவங்க உள்ளதால் மலப்பைகளைப் பயன்படுத்தி மனித மலத்தை திடப்படுத்தி மணமற்றதாக மாற்றும் ரசாயனங்கள் கொண்ட பையை வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
மலையேறுபவர் ஒரு நாளைக்கு தோராயமாக 250 கிராம் கழிவை வெளியேற்றினால், அவர்கள் 2 வாரத்துக்குள் திரும்பி வருவதற்குள் அது மக்கிவிடும் என்றும் விளக்கி உள்ளனர். எனவே தோராயமாக ஒருவருக்கு 2 பைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பையையும் 5 முதல் 6 முறை வரை பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.