கூட்டணியை அறிவிக்கிறார் OPS: அரசியலில் பரபரப்பு
2026 தேர்தலை தாம் எந்தக் கூட்டணியில் இருந்து சந்திக்கப்போகிறோம் என்பதை ஓ.பன்னீர்செல்வம் நாளை அறிவிக்கவுள்ளார். அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட அவர், கடந்த தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். ஆனால், இந்த முறை பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்துவிட்டது. இதனால், ஓபிஎஸ் தனித்து விடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நாளை முக்கிய அறிவிப்பினை வெளியிடுகிறார்.

அதிமுகவுக்குள் என்ன நடந்தது?
கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தூக்கிய போர்க்கொடியால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதிமுக தன்னுடையதுதான் என்று அவர் உரிமைப் போராட்டம் நடத்தி வருகிறார். அதேநேரம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரன், தனியாக அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

பாஜகவுடன் பிரமாண்ட கூட்டணி
2024 தேர்தலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இந்த இருவரும் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தனர். ஓ.பன்னீர்செல்வம் தனியாக பலாபழ சின்னத்தில் நின்று தோற்றுப் போனார். டிடிவி.தினகரன் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் தோல்வியுற்றார். ஆனாலும், பாஜக இடையேயான அவர்களது நட்பு இணைக்கமாகத்தான் இருந்தது.

கூட்டணியில் கோல் போட்ட எடப்பாடி பழனிசாமி
2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை ஓராண்டுக்கு முன்பாகவே ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவை தன்வசம் ஈர்த்திருக்கிறார். இதனால், பாஜக – அதிமுக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இதனால், அதிமுகவுடன் தகராறு செய்து கொண்டிருக்கும் டிடிவி, ஓபிஎஸ் என்ன ஆவர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முடிவை அறிவிக்கும் ஓபிஎஸ்
பாஜக கூட்டணியில் தொடர்வதா அல்லது விலகுவதா என்று ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான முடிவை ஓபிஎஸ் நாளை மாலை (15.05.2025) மாலை அறிவிக்கவுள்ளார். அவரது முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?