உடல் எடையைக் குறைக்க ஒரே வழி இதுதான்
இன்றைய நவீன வாழ்க்கைமுறை மற்றும் சாப்பாட்டு முறையால், உடல் பருமன், சர்க்கரை வியாதி ஆகியவை மிகவும் சாதாரணமாகி விட்டன. அவற்றை சீர் செய்ய ஒரே வழி உடல் எடையைக் குறைப்பதுதான். ஆனால், உடல் எடையை குறைப்பதற்கு, அறிவியல் ரீதியாக ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதைதான் இந்த தொகுப்பில் உங்களுக்கு சொல்லப் போகிறோம்.
உடல் எடை அதிகரிப்பு ஏன்?
நாளொன்றுக்கு உடலுக்கு தேவையான சக்தியை விட அதிகம் சாப்பிடும்போது, அது உடலில் கொழுப்பாக தங்குகிறது. உடல் எடை அதிகரிப்பதற்கும் உடல் பருமன் ஏற்படுவதற்கும் அதுவே முக்கிய காரணமாகும்.
மேலும், உடல் உழைப்பில்லாத வாழ்க்கைமுறை, 8 மணி நேரம் சேரில் அமர்ந்து செய்யக்கூடிய பணி ஆகியவை நமது உடல் எரிக்கும் சக்தியின் அளவை குறைத்து, நமது உணவை கொழுப்பாக உடலில் சேகரிக்கிறது.

உடலுக்கு தேவைப்படும் சக்தியை கணக்கிடுவது எப்படி?
நமது உடல் இயங்குவதற்கு ஒரு நாளுக்கு எவ்வளவு சக்தி (Calorie) தேவை என்பதை கணக்கிடும் முறையை TDEE என்பார்கள். நீங்களே கூகுளில் TDEE Calculator என்று தேடி, உயரம், எடை, வயது ஆகியவற்றை கொடுத்தால் TDEE தெரியவரும்.
சராசரியாக ஆணுக்கு நாளொன்றுக்கு 2500 கலோரிகளும் பெண்ணுக்கு 2000 கலோரிகளும் தேவைப்படும். நமது மூளையின் செயல்பாடுகள், கண், காது, செரிமான உறுப்புகள் ஆகியவை இந்த கலோரிகளை கொண்டுதான் செயல்படுகின்றன.
உடல் எடையை குறைப்பது எப்படி?
உடல் எடையை குறைப்பதற்கு அறிவியல் ரீதியாக இருக்கும் ஒரே வழி, கலோரி அளவை குறைப்பதுதான். உதாரணத்திற்கு, உங்களின் TDEE 2500 கலோரிகள் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் தினமும் 2000 கலோரிகள் உணவு எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும். 3000 கலோரிகள் உண்டால் உடல் எடை கூடும். இவ்வளவுதான் விஷயம்.

கொழுப்பை மட்டும் குறைப்பது எப்படி?
நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை குறைக்கும்போது, நமது உடல் கொழுப்பை மட்டும் கரைக்காமல் நமது தசைகளையும் சேர்த்து உருக்க ஆரம்பிக்கும். இது ஏற்படாமல் தடுக்க, நாம் அதிகளவிலான புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, நாம் நாளொன்றுக்கு நமது உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 1 கிராம் முதல் 2 கிராம் வரை புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டுமா?
நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் கலோரியை மட்டும் குறைத்தால் கூட உடல் எடை குறையும். ஆனால், உடற்பயிற்சி செய்வதனால் இரண்டு முக்கிய நன்மைகள் இருக்கின்றன.
- உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைத்தால், தசைகள் பலம் பெறாமல் முகத்தில் டொக்கு விழுவது, உடல் structure சரியாக அமையாதது போன்றவை ஏற்படலாம்.
- உடற்பயிற்சி செய்யும்போது, அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஆகையால், உங்களது எடை வேகமாக குறையும். அதேசமயம், தசைகளும் வலுபெறும்.

உடலின் எமன்கள் இவைதான்
உடல் எடை குறைப்பின்போது, சர்க்கரை, எண்ணெய் மற்றும் processed foods ஆகியவைதான் முக்கிய எதிரிகள். இவை அனைத்திலும் கலோரிகளின் அளவு மிக மிக அதிகமாக இருக்கிறது. ஆகவே, இவற்றை குறைத்தாலே அல்லது புறம்தள்ளினாலே உடல் எடையை பாதி குறைத்தது போலத்தான்.
எடை குறைப்பின் தாரக மந்திரம்
கலோரியை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள், புரதம் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், தண்ணீர் நிறைய குடியுங்கள், 7 முதல் 9 மணி நேரம் நிம்மதியாக தூங்குங்கள். உடல் எடை குறைந்து புத்துணர்ச்சியாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.