மவுத் ஃபிரஷ்னர் உங்க கிட்சன்லயே இருக்கு!

வாய் துர்நாற்றம் என்பது பல் விளக்காதது, உரிய முறையில் வாயை பராமரிக்காதது மட்டும் காரணமாக இருக்காது. நீண்ட நேர பசி, அதனால் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம். அதன் விளைவாக குடல் மற்றும் உணவுப் பாதையில் ஏற்படும் புண் உள்ளிட்டவையின் வெளிப்பாடாகவும் இருக்கக்கூடும். இதற்காக பலரும் மவுத் ஃபிரஷ்னர் வாங்கி பயன்படுத்துவது உண்டு.

கடைகளில் கிடைக்கும் மவுத் ஃபிரஷ்னர்கள் அதிக இரசாயனங்கள் கலக்கப்பட்டவை. மாதா மாதம் மளிகை பட்ஜெட்டில் செலவும் அதிகரிக்க கூடும். எனவே வீட்டில் நமது சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு அவற்றை மவுத் ஃபிரஷ்னர்களாக பயன்படுத்துவது எப்படி? என்பதை இப்போது பார்க்கலாம். இவை அனைத்துமே முற்றிலும் இயற்கையானவை. அது மட்டும் இல்லாது பக்க விளைவுகளும் அற்றவை.

Mouth fresheners from kitchen
  • சோம்பு

நாம் ஹோட்டல்களில் உணவருந்திய பின்பு அங்கு வெறும் சோம்பு அல்லது சர்க்கரை கோட்டிங் கொடுக்கப்பட்ட சோம்பு, பில் கவுண்டரில் வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது எதற்காக எனில், இயற்கையிலேயே மவுத் பிரஷ்னர்களாக செயல்படும் சிறப்பு சோம்புக்கு உள்ளது. அதுமட்டுமின்றி செரிமானத்தை மேம்படுத்தி எண்டோகிரைன் எனப்படும் நாளமில்லா சுரபிகளை சீர்படுத்தும். மூச்சுக்குழாய் பிரச்சனைகளுக்கும் அதன் சிறப்பான செயல்பாட்டுக்கும் சோம்பு மிக நல்லது.

  • ஏலக்காய்

ஏலக்காய் ஒன்றை எடுத்து வாயில் போட்டு விட்டால் வாய் மட்டும் இன்றி, நமது மூச்சு காற்றிலும் அந்த மணமே நிறைந்திருக்கும். இது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும் சக்திக் கொண்டது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம், அயன், பாஸ்பரஸ், ஃப்ளேவனாய்டுகள் கொண்டது. செரிமானத்துக்கு உதவுவது மட்டுமின்றி இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் ஏலக்காய் சிறந்தது.

  • வறுத்த கொத்தமல்லி விதை

தனியா அல்லது கொத்தமல்லி விதை என இரு முறைகளில் இதனை அழைக்கின்றனர். கொத்தமல்லியை சற்றே வறுத்து, அதை வாயில் போட்டு மெல்ல அல்லது கொத்தமல்லி காபியாக பருக, வாய் துர்நாற்றம் நீங்கும். வருத்த கொத்தமல்லி விதைகளில் சிட்ரோநெல்லால் என்ற மூலக்கூறு உள்ளது. இது குடல் புண், வாய்ப்புண் உள்ளிட்டவற்றை குணப்படுத்தும். இதில் ஆண்டி செப்டிக் பொருட்கள் அதிகம் உள்ளதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படும்.

Natural Mouth fresheners
  • புதினா

புதினா இலை என்பது ஒரு புத்துணர்வான சுவையையும் மணத்தையும் தரும். எனவே புதினா சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். இயற்கையிலே மவுத் ஃப்ரஷ்னராக இது பயன்படுவது மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய பலன்களையும் கொண்டுள்ளது. சற்றே காரம் மிக்க இதன் சுவை கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் என நம்பப்படுகிறது.

  • கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் என்பது பர்ஃபெக்ட் மவுத் ஃபிரஷ்னராக உள்ளது. கொய்யா இலையை அல்லது அதன் சாறை ஆன்ட்டி பாக்டீரியல் பொருளாக பயன்படுத்தலாம். இது வாயில் ஏற்படும் கெட்ட வாடையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தம் கசிவது உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

  • துளசி இலை

துளசி இலையை அடிக்கடி வாயில் போட்டு மென்று வர, வாய்ப்புண் குணமாகும். மேலும், சாப்பிட்ட பொருட்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய் தொற்றை குணப்படுத்தும். பல் ஈறு தொடர்பான பிரச்சனைகளையும் துளசி இலை குணப்படுத்தும் என நம்பப்படுகிறது.

  • கிராம்பு

மணம் மிக்க உணவுப் பொருட்களில் முக்கியத்துவமாக உள்ளது கிராம்பு. இதில் ஆண்டி பாக்டீரியல் மூலக்கூறுகள் அதிகம். இதனால் வாயை ஆரோக்கியமாக பராமரிக்கவும், பற்களில் ரத்தம் கசிதல், சொத்தை உள்ளிட்டவற்றுக்கும் பல் வலிக்கும் இது அருமருந்தாக பயன்படுகிறது.

  • குல்கந்து

ரோஜா இதழ்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு வகை தான் குல்கந்து. இது வாய்ப்புண்களை குணப்படுத்தி வாய் முழுக்க ஒரு குளுமையான உணர்வை தரக்கூடியது. பன்னீர் இதழ்களை தேனிலோ சர்க்கரையிலோ ஊற வைத்து பதப்படுத்தப்படும் இந்த இனிப்பு கடைகளிலும் கிடைக்க கூடும். வாய் திறந்தாலே துர்நாற்றம் வருவதற்கு பதில் பன்னீர் ரோஜாவின் மணம் மணக்கும். இயற்கையிலேயே இது மவுத் சிறந்த இன்ஸ்டென்ட் மவுத் ஃபிரஸ்னராக பயன்படும்.

இது போன்ற பல சுவாரஸ்மான டிப்ஸ்களைத் தெரிந்து கொள்ள “த காரிகை“-யின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்!

Facebook
Instagram
YOUTUBE