குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, நோய் எதிர்ப்பு குறைவா?

15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு சளிப் பிடிப்பதும், காய்ச்சல் வருவதுமாக இருப்பதாக ஒரு சில பெற்றோர்கள் கவலை கொள்வார்கள். ஆயினும் அவர்கள் ஒவ்வொரு முறை காய்ச்சல் குறையாத போதும் மருத்துவரை அணுகுவது நல்லது. குழந்தைகள் விஷயத்தில் அதிக பயமும் ஆகாது. அதே சமயம் அதிக அசால்ட்டும் ஆகாது. ஜெயிலர் படத்தில் ரஜினி சொல்வது போல சொன்னதற்கு மேலும் செய்யக் கூடாது, சொன்னதற்குக் கீழும் செய்யக் கூடாது. சொன்னதை மட்டும் செய்ய வேண்டும். அதேபோல்தான் குழந்தை பராமரிப்பும்.

எனவே ஒரு குழந்தையின் காய்ச்சல், சளி தொடர்பாக சமூகத்தில் நிலவும் கட்டுக்கதைகளையும் அது தொடர்பான உண்மைகளையும் விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் நிஹார் பரேக்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டையும் பகிர்ந்துள்ளார். அதில் கொடுத்துள்ள விளக்கங்களின் சாராம்சத்தை த காரிகையின் செய்தித் தொகுப்பில் காணலாம். கிளைமேட் சேஞ்ச் காரணமாக பெரும்பாலான குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் வரலாம். அல்லது புதிய ஒரு சூழலில் பழகும் குழந்தைகளுக்கும் சளி, காய்ச்சல் வரலாம். உதாரணத்துக்கு புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளோ, வெகு நாட்கள் விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு சென்ற குழந்தைகளுக்கோ பிற குழந்தைகளிடம் இருந்து சளி, காய்ச்சல் தொற்றிக் கொள்ளலாம்.

கட்டுக்கதை

குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வருவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவே காரணமா?

உண்மையா?

இல்லை. ஒரு குழந்தை ஒவ்வொரு 15-20 நாட்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு தொற்றால் பாதிக்கலாம். அலர்ஜி, இருமல் மற்றும் சளி, அல்லது காய்ச்சலுடன் கூடிய இருமல் மற்றும் சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படலாம். இவையெல்லாம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம் இல்லை. இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உங்கள் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்களையும் பாக்டீரியாக்களையும் கண்டறியும் திறன் இருக்கிறது. அந்த வகையில் இது ஒரு நல்ல அறிகுறி என்றே மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதிக மருந்துகளை எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையுமா?

இருமல், சளிக்கான மருந்துகளை அதிகம் ஆன்டிபயாடிக்ஸ் அல்லது வைரஸ் தடுப்பு மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பது பற்றி பெற்றோருக்கு கவலையிருக்கும். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடும், சுயமாக நோயை எதிர்த்துப் போரிடும் திறன் உடலில் குறைந்தவிடும் என்ற அச்சம் இருக்கும். எனவே, அதுபற்றியும் மருத்துவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாக்டீரியா தொற்றுக்கு ஆன்டிபயாடிக், காய்ச்சலுக்கு ஆன்டி-வைரல், இருமல் மற்றும் சளிக்கு இருமல் சளி சிரப், காய்ச்சலுக்கு காய்ச்சல் மருந்து ஆகியவை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். இவை உரிய சூழலில் சரியான காரணத்திற்காக சரியான மருந்து கொடுக்கப்பட்டால் கவலை கொள்வது அவசியமில்லை எனக் குறிப்பிட்டார் மருத்துவர். சரியான மருந்துடன் அளவுக்கு அதிகம் இல்லாத டோஸேஜ் மருந்தை சரியான வடிவத்தில் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் அது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காது. குழந்தை மருத்துவர் பரிசோதித்து பரிந்துரைக்கும் எந்த ஒரு மருந்தும் கல்லீரல் அல்லது சிறுநீரகத்தை சேதப்படுத்தாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE