ஞாயிறு மதியம் மட்டன் எடுக்குறிங்களா? ஈரல் கிரேவி செய்யுங்க
சிறுபிள்ளையாக இருக்கும்போது ஞாயிறு மதியம் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது என்ன சாப்பிட்டாலும் ருசியாகத்தான் இருக்கும். அதுவும் மட்டன் எடுத்து சாப்பிடும் போது, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என யார் தட்டிலாவது இருந்து ஈரல் துண்டு நமது தட்டுக்கு வந்து விழும். அவர்கள் அதை சாப்பிடாது குழந்தை சாப்பிடட்டுமே என்று நமக்காக அந்த ருசியான துண்டை விட்டுக் கொடுப்பார்கள். நாம் வளர்ந்த பின் நமது தட்டில் ஈரல் துண்டு வந்தாலும் நமது குழந்தைக்கோ அல்லது நமது உடன் பிறந்தவர்களின் குழந்தைக்கோ அதை எடுத்துக் கொடுப்பது வழக்கம்.
மட்டன் சாப்பிடும்போது இதுதான் சம்பிரதாயம் என எழுதப்படாத விதியாகவே ஈரல் துண்டுகள் தட்டுமாறும் கதை நம் அனைவரது வீடுகளிலும் பார்த்த ஒன்றாக தான் இருக்கும்.
ஏன் அந்த ஈரல் துண்டை விற்று கொடுக்கிறார்கள்? என்றால் அந்த ஆட்டு ஈரலில் அதிகளவு ஆரோக்கியமும் பொதிந்துள்ளது.
அதை எப்படி சுவையாக சமைப்பது என்பதை பற்றி இந்த கட்டுரைகள் பார்க்கலாம்.
ரத்த சோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள் என பலருக்கும் இந்த ஆட்டு ஈரல் துண்டை சமைத்துக் கொடுங்கள். அதிகாலையிலேயே அதாவது மட்டன் கடையில் ஆடு அறுக்கும் போதே சென்று விட்டீர்கள் என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணமாவது லஞ்சம் ஆக கொடுத்து ஆட்டு ஈரலையும், கிடைத்தால் சுவரொட்டியும் வாங்கிக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
2 வெங்காயம்
1 தக்காளி
ஒன்றரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
300 கிராம் ஈரல்
1 பச்சை மிளகாய்
ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் தனியா
அரை டீஸ்பூன் சீரகம்
எண்ணெய் தேவைக்கேற்ப
கருவேப்பிலை சிறிது
உப்பு தேவைக்கேற்ப
எப்படி செய்வது?
அடுப்பில் வைத்து தனியா மிளகு சோம்பு சீரகம் ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும். அதன்பின் அதனை ஆற வைத்து பொடியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். அம்மியில் அரைத்தாலும் நன்றாக தான் இருக்கும்.
பின் அதே கடாயில் சற்று எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமான பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இதை அடுத்து தக்காளி சேர்த்து வதங்கிய பின் மஞ்சள் தூள், ஈரல் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
ஆட்டு ஈரலானது ஓரளவுக்கு நிறம் மாறி இருக்கும். அப்போது அது வதங்கியதாக கருதப்படும். வதங்கிய ஆட்டு ஈரலில் மிளகாய் தூள், கரம் மசாலா அரைத்து வைத்த மசாலா உப்பு சேர்த்து கிளறி வதக்கலாம்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும்.
ஈரலும் நன்றாக வெந்து கிரேவியும் சரியான பதத்துக்கு வந்தபின் கறிவேப்பிலை கொத்தமல்லி தலை தூவி இறக்கிக் கொள்ளலாம். மிளகைப் பொடி செய்து தூவிக்கொள்ளலாம்.
சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி. சூடான சாப்பாட்டில் பிணைந்து ஆளுக்கு ஒரு வாய் என உருண்டை பிடித்து சாப்பிட மிகவும் ருசியாகவும் இருக்கும். அதே சமயம் மிக ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.