அம்மா-மகள் அன்பின் ஆழம் சொன்ன படங்கள்
தமிழ் திரையுலகில் பெரும்பாலும் அண்ணன்-தங்கை, அப்பா-மகள், அம்மா-மகன் போன்ற உறவுகளுக்கு இடையே உள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தாய்க்கும் மகளுக்கும் உள்ள பந்தங்களை விளக்கும் திரைப்படங்கள் விரல்விட்டு எண்ணி விடலாம் என்றே சொல்ல வேண்டும். அத்தகைய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் வெளி வந்தாலும் சொல்லப்படாத அல்லது அதிகம் கொண்டாடப்படாத இந்த தாய் மகள் அன்பை எந்தெந்த படங்களில் எப்படி எல்லாம் வெளிப்படுத்தி உள்ளன என்பதை தற்போது பார்க்கலாம்.
அஞ்சலி
1990 இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் ரேவதியும் ரகுவரனும் உயர் நடுத்தர குடும்பத்தில் வாழ்பவர்கள். தங்களது சமூகத்தில் இன்டலெக்சுவல் டிசேபிளிட்டி உள்ள குழந்தையை எப்படி வளர்க்கின்றனர்? என்பதை பற்றிய கதையாக இது அமைந்திருக்கும்.
“பைத்தியமா? வீட்டுக்குள்ளேயே வெச்சிருக்க போறீங்களா? பாக்கவே பயமா இருக்கு” என்பது போன்ற சமூகத்தின் குத்தும் வார்த்தைகளை கடந்து ஏக்கத்தோடு “அஞ்சலி என்கிட்ட வருவாளா?” என அழுதபடியே ரேவதி கேட்கும் வசனங்கள் எல்லாம் அம்மா மகளின் தொண்டையைக் கவ்வும் துக்கத்தையும் அன்பையும் அச்சு அசலாக வெளிப்படுத்தியது. அஞ்சலியின் இறுதி நாட்களில் ஒரு தாய் எப்படி அதை சமாளிக்கிறாள் என்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ரேவதி. பேபி ஷாமிலிக்கும் இப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
கன்னத்தில் முத்தமிட்டால்
இதுவும் தாய்-மகள் பற்றிய மணிரத்தினத்தின் மற்றொரு புனிதமான படைப்பு என்றே சொல்ல வேண்டும். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இந்திராவாக நடித்திருக்கும் சிம்ரனும், அமுதாவாக நடித்திருக்கும் கீர்த்தனாவும் தங்களது அன்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பர்.
இருவருக்கும் இடையே சின்ன சின்ன சண்டைகள் வந்த போதிலும் தான் தனது தாயாருக்கு பிறக்கவில்லை சியாமா என்ற ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தை என்பதை அமுதா தெரிந்துகொள்வார். உண்மை உணர்ந்ததும் அச்சிறுமி மேற்கொள்ளும் பயணம் இப்படத்தில் மையக்கருவாக அமைந்தது. “நான் என் குழந்தையை சரியா வளக்கலையா?” என்று சிம்ரன் குற்ற உணர்ச்சியில் பேசும் வசனங்கள் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்தன. குறிப்பாக ஒரு தெய்வம் தந்த பூவே பாடலில் “இரவல் வெளிச்சம் நீ!, இரவின் கண்ணீர் நீ!” என்ற வரிகள் இவர்களது அன்பை அழகாக வெளிப்படுகிறது.
பாபநாசம்
மலையாளத்தின் திரிஷ்யம் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட பாபநாசம் படத்தில் கமல் கௌதமி ஒரு நடித்திருந்தனர்.
கேபிள் டிவி ஆபரேட்டராகவும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த கமல் நடித்திருப்பார். தனது மகள் செல்விக்கு ஒரு இளைஞனால் வரும் பிரச்சனையை எதிர்கொண்டு கையாளும்போது மகளை காப்பாற்ற கௌதமி போராடும் விதமும் அழுத்தமாகப் படமாக்கப்பட்டிருக்கும்
கோலமாவு கோகிலா
இதே போல கோலமாவு கோகிலா படத்தில் சரண்யா பொன்வண்ணனுக்கும் நயன்தாராவுக்கும் உள்ள அன்பும் மிக மேலோட்டமாக இருந்தாலும், அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கும்.
இறுதியில் அவர்கள் இணைந்து ஒரு கொலை செய்வது போன்ற காட்சிகளில் கூட தாயும்-மகளும் மிகச் சிறப்பாகவே நடித்திருப்பார்கள்.
36 வயதினிலே
இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படத்தில் தாயாக அவமதிக்கப்படும் ஸ்ரீதேவி எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்கிறாரோ? அதே போன்று திரையுலகில் ஒரு பிரேக்குக்கு அப்புறம் கம் பேக் கொடுத்த ஜோதிகாவும் அழகாக தன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
அரசுத் துறையில் பணியாற்றினாலும், வீட்டிலோ, அலுவலகத்திலோ தொடர்ந்து அவமதிக்கப்படுவார். பின், வீட்டுத் தோட்டம் மூலம் கவனம் பெற்று குடியரசுத் தலைவரால் பாராட்டப் பட்ட பின்தான் தனது சுயத்தைப் பெறுவார் ஜோதிகா. தனது மகளிடமும் மதிப்பு பெற்று தலைநிமிர்ந்து வாழ்வார். வாடி ராசாத்தி பாடல் இன்றளவும் பெண்களைப் பாராட்டும் பாடலாக அமைந்துள்ளது.
இதேபோல் அம்மா கணக்கு, இங்கிலீஷ் விங்கிலீஷ் உள்ளிட்ட படங்களும் அம்மா மகளின் ஆழமான அன்பை வெளிப்படுத்து இருக்கும்