சாமி கும்பிட தேவதையான ஆண்கள். . .
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது கொட்டம்குளக்கரா தேவி கோவில். இங்கு, ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், ஆண்களும் பங்கேற்க விரும்பி ஒரு திட்டம் தீட்டினர். தேவியை தரிசிக்க, தாங்களும் பெண்ணாகவே மாறுவேடமிட்டு கோவிலுக்குள் வந்தனர். பின், இந்த மாறுவேடம் சமய விளக்குத் திருவிழா வந்தால் வாடிக்கையாகிப் போனது.
எதற்காக பெண் வேடம்?
எந்த ஒரு ஆண், ஆணவம், கர்வம் கடந்து பெண்ணையும், பெண்ணியத்தையும் தாங்கள் மதிப்பதாக உணர்த்தும் வகையில் பெண் வேடமிட்டு தன் சன்னதிக்கு வருகிறாரோ, அவருக்கு வேண்டிய செல்வத்தை அள்ளித் தருவாராம் தேவி. எனவே, இதில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்களைப் போல் வேடமிட்டு ஆண்டுதோறும் இந்த சமய விளக்குத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
எப்படி மேக்கப் செய்தனர்?
வெறும் மீசை, தாடியை மழித்து புடவை கட்டினால் மட்டும் இவ்வளவு அழகிய, லட்சணம் மிக்க பெண்களாக வடிவெடுக்க முடியாது. பொட்டு வைத்து, புடவை அணிந்து, பூ வைத்து பெண்களின் இயற்கை அழகைவிட மிஞ்சும் அளவுக்கு மேக்கப் செய்வர். இதற்கென கோவில் வளாக மண்டபத்தில் ஒப்பனைக் கலைஞர்களும், ஆடை, ஆபரணங்களுடன் தயாராகக் காத்திருக்கின்றனர். ஒரு சில மணி நேரங்களில் ஒவ்வொரு ஆணையும் பெண்ணாக மட்டுமல்ல, அழகு ததும் தேவதையாகவே மாற்றி அசத்தி விடுகின்றனர்.
எப்படி வேண்டுதல் நிறைவேற்றினர்?
5 முக விளக்கைக் கையில் ஏந்தி, தேவியின் சன்னதியை இரவு முழுக்க வலம் வந்து வழிபடுகின்றனர். அப்போது தெரிந்தோ, தெரியாமலோ தாங்கள் ஏதும் துரோகம் செய்தால், தேவியிடம் ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டு வழிபடுகின்றனர்.
கோவில் உருவானது எப்படி?
முன்பொரு காலத்தில் கோயில் அமைந்துள்ள பகுதிகளில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு சிறுவர்கள் சென்றனர். ஒரு கல்லில் தேங்காய் உடைத்தபோது அதில் இருந்து குருதி வழிந்தது. இது குறித்து ஊர் மக்கள் ஜோதிடரிடம் கேட்டபோது அது கல் அல்ல வனதுர்கா என்றும் தெரிவித்துள்ளார். அன்று முதல் அங்கு கோயில் எழுப்பி ஆண்டுதோறும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மூங்கில்களால் கூரை அமைத்து அமைக்கப்பட்ட இந்த கோயில் பின்னர் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது.
திருநங்கைகளும் பங்கேற்பு
இந்தக் கோவிலில் பெண்களும், பெண்களைப் போல் வேடமிட்ட ஆண்களும் மட்டுமல்ல. திருநங்கைகளும் தேடி வந்து மனமுருக வழிபட்டுச் செல்லும் தலமாக உள்ளது கொட்டம்குளக்கரா தேவி கோவில். தேவியிடம் மனம் உருக வேண்டிச் சென்றால் நினைத்தது நிறைவேறும் என நம்பப் படுகிறது. ஆதலால் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிநாடு சென்றவர்களும் இங்கு வந்து தேவியை வழிபட்டுச் செல்வது குறிப்பிடத்தக்கது.