மருத்துவ குணம் நிறைந்த நாவல்
இனிப்பு மற்றும் கசப்பு கலந்த சுவையில் உள்ள பழம் தான் நாவல். ஊதா நிறத்தில் உள்ள நாவல் பழம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகசூல் தரும். ஜூன், ஜூலை, ஆக்ஸ்ட் ஆகிய 3 மாதங்களில் மட்டுமே நாவல் பழத்தின் சீசன் இருக்கும். நாவல் மரத்தின் பட்டை, வேர், பழம், கொட்டை என அனைத்திலும் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.
நாவலின் வகைகள் :
ராம் நாவல், நாட்டு நாவல் என இரண்டு வகையான நாவல் பழங்குள் உள்ளன. ராம் நாவல் பழங்கள் பெரிதாகவும், நீள்சதுர வடிவத்திலும், முழுமையாக பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது நீல கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த வகையான பழத்தில், அதிக சாறுடையதாகவும், இனிப்பு சுவை அதிகம் இருக்கக் கூடியதாக இருக்கும். இந்த பழத்தின் கொட்டை சிறிதளவே இருக்கும். நாட்டு நாவல் பழமோ அளவில் சிறிதாகவும் சற்று உருண்டையானதாகவும் இருக்கும். ராம் வகை நாவலை விட சாறு குறைவாகவும், இனிப்பு தன்மை குறைவாகவும் இருக்கும். பழத்தின் கொட்டையின் அளவு பெரிதாக காணப்படும்.
மருத்துவ பயன்கள் :
- நாவல் பழம் இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்க பயன்படுத்தப்படுகிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
- வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிக அளவில் உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
- நாவல் பழ கொட்டையின் பவுடர் உடன் பால் கலந்து தடவி வர முகப்பருவை போக்கும்.
- நாவல் மரப்பட்டை மற்றும் நாவல் பழக்கொட்டை, அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சிகிச்சைக்கு பயன்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த பழத்தின் கொட்டையை வெயிலில் காய வைத்து , அரைத்து பொடியாக்கி பால் அல்லது தண்ணீரில் கலந்து உட்கொண்டால் சக்கரையின் அளவு குறையும். அதற்காக அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது.
யார் சாப்பிடக்கூடாது?
வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பால் சாப்பிடுவதாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் இந்த பழத்தை சாப்பிட கூடாது. பழத்தின் நிறம் ஊதா என்பதால், பற்களில் கரை படிய அதிக வாய்ப்புள்ளது. பழத்தை உண்ட பின்பு கட்டாயம் வாயை தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை நாவல் பழம் குறைப்பதால், அறுவை சிகிச்சைக்கு செல்லக் கூடிய நோயாளிகள் குறைந்த பட்சம் 2 வாரங்கள் முன்னதாகவே பழம் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்து உடல் சீராகும் வரை தவிர்ப்பது நல்லது.
சாப்பிடும் முறை :
பொதுவாகவே நாவல் பழத்தில் உப்பு அல்லது மிளகாய் பொடிகளை தடவி சாப்பிடலாம். நீங்கள் சாலட் விரும்பிகளா இருந்தால் காய்கறிகள் அல்லது பழங்களுடன் நாவல் பழத்தையும் சேர்த்து சாப்பிடலாம். ஒரு சிலருக்கு பல வகையாக பழங்களை வைத்து செய்யும் ஜாம்களை விட ஒரே ஒரு பழத்தை வைத்து செய்யும் ஜாம்களை விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு. அப்படி இருந்தால் நாவல் பழத்தை வைத்து ஜாம் தயாரித்து சப்பாத்தி மற்றும் பிரட்களில் தடவி சாப்பிடலாம். நாவல் பழச்சாறைக் கொண்டு ஐஸ் கீ ரிம் மற்றும் ஜெல்லீஸ் களை தயாரிக்கலாம்.
nice