பெண்களுக்கு வருது சூப்பர் திட்டம் தெரியுமா?
பெண்கள் சம்பாதித்தாலும், சம்பாதிக்காவிட்டாலும் அவரவர் வாழ்க்கைக்கு என ஒரு மிகக் குறுகிய அளவிலாவது சிறு சேமிப்பு இருக்க வேண்டும். இதுவே, மத்திய அரசின் கருத்து.
- பணத்துக்கு ஆண்களை எதிர்பார்க்கும் சூழல்
படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் வீடுகளிலும் வீட்டு வேலைகளிலுமே வாழ்க்கையை செலவிடுகின்றனர். சேமிப்புக்களையும் வீடுகளிலோ, அவற்றுக்கான செலவுகளிலோ தான் முடக்குகின்றனர். இதனால் சம்பாதிக்கும் பெண்களுக்குக் கூட நிதி சுதந்திரம் என்பது வெகுவாக அவர்களுக்கு குறைந்திருக்கிறது. சம்பாதிக்காத பெண்கள் பணத்துக்காக தந்தையையோ, சகோதரனையோ, கணவனையோ, மகனையோ என ஏதேனும் ஒரு ஆண்பால் இனத்தை, அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
- நிதி சுதந்திரம் இல்லா பெண்கள்
பணிக்கு செல்லும் பெண்கள் என்றால் பணம் சம்பாதித்து சற்று கையில் வைத்திருப்பார்கள். ஆனால், அதை சிறுசேமிப்பாகவும், முதலீடாகவும் போட்டு வைக்க அவர்களுக்கு சுதந்திரம் உண்டா? என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும்.
- முதலீட்டை சேமிப்பாகக் குவிக்கலாம்
கணவரால் கைவிடப்பட்ட பெண்களும், கணவர் இறந்தபின் அவர்கள் காலத்துக்குப் பின்பு தனியே வாழ்க்கையையும் குடும்பத்தையும் ஓட்ட நினைக்கும் பெண்களுக்கும் இத்திட்டம் உகந்தது. கணவரின் இறப்பின் மூலம் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையோ, தனது நீண்ட கால சம்பாத்தியத்தின் பி எஃப் பணமுமோ இத்திட்டத்தின் கீழ் வட்டியுடன் கூடிய சிறுசேமிப்பாக மாற்றலாம்.
- சேமிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது
2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி அரசின் மகளிருக்கான சிறப்பு திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இது, பெண்களின் சேமிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கிறது.
- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “நிதி சேர்க்கை மற்றும் பெண்களை மேம்படுத்துவது”-ஐ நோக்கமாகக் கொண்டு இதனை அறிவித்தார். மார்ச் 31 2023 ஆம் தேதி அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்து “அம்ருத் மஹோத்சவ்” கொண்டாடுவதன் நினைவாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு நிலையான வருமான முதலீட்டு திட்டம் ஆகும். ஏற்கனவே அமலில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எஃப், தேசிய சேமிப்பு சான்றிதழ் எனப்படும் என்.எஸ்.சி, நிலையான வைப்புத் தொகை போன்ற பிற முதலீட்டை விட இதில் நிலையான வட்டி விகிதம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் இந்த முதலீடு பெண்களின் நிதி அதிகாரத்தை ஊக்குவிக்க அமல்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
- வட்டி விகிதம் என்ன?
2 ஆண்டு கால சேமிப்பு திட்டமாக உள்ள இந்த திட்டத்தில் 7.5% வட்டி வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு சுலபமான முதலீடு ஆகும். பகுதி அளவு திரும்ப பெரும் வாய்ப்பும் உள்ளது. இது, அதிகபட்ச உச்சவரம்பு 2 லட்சமாக நிர்ணயிக்கப்படுகிறது.
- வரிவிலக்கு உண்டா?
மத்திய அரசு வெளியிட்டு உள்ள இந்த அறிவிப்பு, முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வருமானவரிச் சட்டத்தின் 80 சி பிரிவின்படி விலக்கு கிடையாது. எனவே, இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழுக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக்கு சென்ற விண்ணப்பித்தாலே போதுமானது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நாட்டில் உள்ள 1,59,000 தபால் நிலையங்களில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் டவுன்லோடு செய்வதற்கான லிங்க் இதோ . முழு விவரங்கள் இதோ.