மதுரை சித்திரைத் திருவிழா
மதுரை என்றதும் மீனாட்சியும் கள்ளழகரும் நினைவிற்கு வரும். மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் ஆகிய இரு கோயில்களின் ஒருங்கிணைந்த விழாக்கள்தான் சித்திரைத் திருவிழாவாக நடைபெறுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல் ஓரிரு ஆண்டுகள் மக்கள் பங்கேற்பு இல்லாமல் எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் வழக்கம் போல் மக்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது. மதுரை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.
முக்கிய நிகழ்வுகள் எப்போது?
முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மே 2-ம் தேதி நடைபெறுகிறது. தங்கக் குதிரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5-.ம் தேதி நடைபெறவுள்ளது.
கொடியேற்றம் எப்போது?
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடக்கிறது. இதையடுத்து தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.
என்னென்ன வீதி உலா?
தினமும், காலையும் மாலையும் வீதி உலா நடைபெறுகிறது.
சிம்ம வாகனம்
அன்ன வாகனம்
காமதேனு வாகனம்
தங்கப் பல்லாக்கு
தங்க குதிரை
தங்க ரிஷபம்
வெள்ளி ரிஷபம்
நந்திகேஷ்வரர் யாளி
வெள்ளி சிம்மாசனம்
இந்திர விமானம்
தங்க அம்பாரியுடன் யானை வாகனம்
புஷ்பப் பல்லாக்கு
சப்தாவர்ணச் சப்பரம்
வெள்ளி ரிஷபம்
பெண் தெய்வத்துக்கு பட்டாபிஷேகம் செய்யும் ஒரே ஊர் மதுரை
மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் கிடையாது. பாண்டியர்களின் குலதெய்வம் என மீனாட்சியை சொல்லும் வகையில் பட்டம் சூடும் அன்று பாண்டியர்களின் குலச்சின்னமான வேப்பம் பூ மாலையை சூடுகிறார் மீனாட்சித் தாய்.
ஏப்.,30ல் இரவு 7:05 மணி முதல் 7:29 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடக்கிறது. மே 1ல் திக்குவிஜயம், மே 2ல் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 3ம் தேதி காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 4ல் மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதேநாளில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் மதுரை வரும் அழகரை வரவேற்று எதிர்சேவை நடக்கிறது. மே 5ம் தேதி வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்குகிறார்.
என்னென்ன ஏற்பாடுகள்?
திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண ஆடி வீதிகளில் தகர ஷீட் பந்தல் அமைக்கப்படுகிறது. திருக்கல்யாண மேடையில் 300 டன் குளிர்சாதன வசதியும், திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் குளிர்சாதன வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 ஆயிரம் பேர் முன்னுரிமை அடிப்படையில் இலவச தரிசனமாக தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். 2500 பேருக்கு ரூ.500 கட்டண சீட்டு வழங்கப்படுகிறது. 3500 பேருக்கு ரூ.200 கட்டண சீட்டு வழங்கப்பட்டு வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.