கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன் தெரியுமா?

0

அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது மதுரை மாநகரில் சித்திரை மாதம் நடைபெறும் கோலாகலமான நிகழ்ச்சியாகும். சைவ, வைணவ ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை ஒட்டி நடைபெறும் இந்த திருவிழா மொத்தம் பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம்

சித்திரை திருவிழாவானது ஆண்டுதோறும் மதுரையில் சித்திரா பௌர்ணமிக்கு 10 நாள்கள் முன்பு தொடங்கும். சரியாக சித்திரா பௌர்ணமியன்று மீனாட்சி திருக்கல்யாணத்துடன் திருவிழா நிறைவு பெறும். அன்றைய தினமே அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறும். இதற்கான பின்னணியின் அழகான கதையொன்று உள்ளது.

அழகரின் எதிர்சேவை

மதுரைக்கு அருகே 21 கிமீ தூரத்தில் அழகர் மலையில் குடியிருக்கும் அழகர், தனது தங்கை மீனாட்சியின் திருமணத்திற்கு கோலாகலமாக கிளம்புகிறார். கள்ளர் வேடம் பூண்டு அவர் மதுரை நோக்கி வருவதால், அவர் கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த நிகழ்வு எதிர்சேவை என்று அழைக்கப்படுகிறது. 

வரும் வழியெல்லாம் பக்தர்கள் கூடி நின்று கள்ளழகரை வழிபடுவர். இதனால், மதுரை நோக்கி செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி மெல்ல மெல்ல முன்னேறுகிறார் அழகர். இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

அழகர் ஆற்றில் இறங்குதல்

பக்தர்களின் தரிசனத்திற்காக பொறுமையாக வரும் அழகர், தனது தங்கை மீனாட்சியின் திருமணத்தை தவற விடுகிறார். அவர் வருவதற்குள் மீனாட்சியின் கழுத்தில் சொக்கநாதர் தாலி கட்டி விடுகிறார். இதனால், ஆத்திரமடைந்த அழகர், தங்கையை பார்க்காமலே வைகை ஆற்றில் முழுக்கு போட்டுவிட்டு அழகர் மலை நோக்கி புறப்பட்டுவிடுவார். இதைத்தான் புராணக் கதை கூறுகிறது.

ஆற்றில் இறங்கும் வைபவம்

இந்தப் புராணக் கதையை கோயில் நிர்வாகம் ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடுகிறது. சித்திரா பௌர்ணமிக்கு முதல்நாள் அழகரின் எதிர்சேவை நடைபெறும். சரியாக பௌர்ணமி தினத்தன்று சொக்கர் – மீனாட்சி திருமணமும் அதனைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறும். அதன்பின், வண்டியூர் சென்று அங்கிருந்து அழகர் மலை செல்வார் கள்ளழகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *