பத்தல, பத்தல, Love’uh பத்தல. . .
குழந்தைகளுக்கு எவ்வளவு தான் அன்பையும் முத்தமழையையும் பொழிந்தாலும், அவர்களுக்கு அது போதாது தான். ஆனால், அந்த அன்பு பத்தாமல் எங்கோ, ஏதோ தவறாக இருக்கிறதே? என்ற எண்ணம் தோன்றலாம். எவ்வளவு வாய் பேசினாலும், குழந்தைகள் இதை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களின் நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்வது ஒரு தாய்க்கு அவசியமான ஒன்றாகும்.
அன்பும், ஆதரவும் போதுமானதாக உள்ளதா, நிறைவான வாழ்க்கை வாழ்கின்றனரா? என்றெல்லாம் அவர்கள் சொல்லாமலே தெரிந்து கொள்வது எப்படி? மறைமுகக் குறிப்புணர்த்தல்கள் என்னென்ன? என்பதைக் காணலாம்.
அணைத்தலில் அதிக இறுக்கம்
உங்கள் குழந்தை வழக்கமாக அணைத்தலை விட, மிகவும் இறுக்கமாக அணைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஏதோ அச்ச உணர்வோ, சொல்ல முடியாத வருத்தமோ, அல்லது உங்களை சற்று நேரம் மிஸ் செய்ததற்கான வருத்தமாகவோ இருக்கலாம். பதிலுக்கு நீங்களும் உங்கள் குழந்தைகளை வழக்கத்தை விட சற்று இறுக அணைப்பதும் அவர்களுக்கு ஆறுதல் தரும். இந்தக் கட்டிப்பிடி வைத்தியம் தோற்றதாக என்றுமே சரித்திரமில்லை.
குறை சொல்தல்
“இன்னைக்கு ஏன் மா? இவ்ளோ லேட்டு?” என பணியில் இருந்தோ, வேறு எங்கேனும் இருந்தோ வீடு திரும்பும்போது குழந்தைகள் இந்த கேள்வியைக் கேட்கலாம். இது நீங்கள் வரும் வரை அவர்கள் உங்களை மிஸ் செய்திருக்கிறார்கள் என்ற அர்த்தமாகும். “நானே டையர்ட்-ஆ வந்திருக்கேன், விடு” என சளைத்துக் கொள்ளாமல் “சாரி, செல்லம்” எனக் கூறி ஒரு முத்தா மட்டும் கொடுத்துப் பாருங்கள். பின், அவர்களின் குறைகளுக்கெல்லாம் இறக்கை முளைத்து எங்கோ பறந்துவிடும்.
அடம்பிடித்தலும், அழுகையும் அதிகரிக்கும்
வெறுமனே பிடிவாதம் பிடிக்கும் அனைத்து விஷயங்களையும் அப்படியே ஒதுக்கிவிட முடியாது. அதில், சில உங்கள் அன்புக்கான ஏங்கலுடைய வெளிப்பாடாகும். கத்திக் கூப்பாடு போடுவதெல்லாம் தங்கள் தாய் அல்லது தந்தையின் அன்புக்காக மேற்கொள்ளும் Attention Seeking Behavior ஆக இருக்கலாம். உங்கள் அன்பை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொண்டால் குழந்தைகள் ஏங்கிப் போகும் அளவு இருக்காது.
செய்யக் கூடாததை செய்வது
எதை செய்யக் கூடாதோ அதை செய்வது, அதுதான் சரி என வாதிடுவது என்பது போன்ற நடவடிக்கைகளை குழந்தைகளிடம் காணலாம். இந்த நேரத்தில் அவர்களைத் திட்டாமல் எங்கு தவறு நடந்துள்ளது? என்ன நடந்துள்ளது? என்பதை நூல் பிடிப்பது போல் கனெக்ட் செய்து பார்த்தால் தெரிந்துவிடும்.
பேசாமல் இருப்பது
வாயாடிக் கொண்டே இருக்கும் குழந்தைகள் திடீரென அமைதியாவதும், பேசாமல் இருப்பதும் குழந்தைகளுக்கு எங்கோ உங்கள் அன்பு போதவில்லை என்று அர்த்தம் மட்டும் அல்ல. அவர்களுடைய ஏதோ ஒரு பிரச்னையை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்பதாகும். அவர்களை சற்று நேரம் வெளியே அழைத்துச் சென்று, பேசிப்பாருங்கள்.
அவமதித்தல்
பொது இடத்தில் குழந்தைகள் உங்களை கலாய்ப்பதும், அவமதிப்பதும் உங்களுக்கு வருத்தம் தரலாம். தனியே இருக்கும்போது, அவர்களுக்கு உங்கள் மீதுள்ள வருத்தம் என்ன? என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அன்பை நிவர்த்தி செய்யுங்கள்.
ரூமை விட்டு வராது இருத்தல்
அறையை விட்டு வெளியே வராமல் அடைந்து, முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் பிரச்னை உள்ளது. அந்தப் பிரச்னையை உங்கள் அன்பால் தீர்க்க முடியாதது என்றில்லை. அவர்களுக்குப் பிடித்த உணவை சமையுங்கள். அந்த மணமே அவர்களை வெளியே அழைத்து வந்து உங்களுடன் அமர வைக்கும். உணவருந்தும் போது பேச்சுக் கொடுத்தால் உண்மை வெளியே வரும்.
அடிக்கடி கேள்வி கேட்பது
அம்மா, நான் அழகா இருக்கேனா? இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கா? என குழந்தைகள் கேட்கும்போது, அந்தப் புகழுரைகளை நீங்கள் கொடுக்கத் தவறிவீட்டீர்களாக இருக்கலாம். தங்கள் அன்பையும், புகழுரைகளையும் நீங்கள் கொடுத்தீர்கள் என்றால், அன்பில் மிகச்சிறிய இடைவெளி கூட வராது என்று அர்த்தமாகும்.
இது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள “The Karigai” பக்கம் அடிக்கடி வாங்க. .