“நான் செத்துட்டா, ஒரு கொலையாளியோட பையன்னு மகனுக்கு முத்திரை குத்திருப்பாங்க, அதனால தற்கொலை பண்ணல” ததும்பும் கண்ணீரைக் கட்டுப்படுத்தி, தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கிவிட்டு வெளிவந்த பக்குவப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

சதியால் சிறை சென்று வெளிவந்த கிரைம் பிரிவு பெண் பத்திரிக்கையாளர் ஜிக்னா வோராவுடைய வாழ்க்கையின் கடினமான பக்கங்கள் புத்தகமாகி, பின் நெட்ஃபிளிக்சிலும் “ஸ்கூப்” என்ற பெயரில் வெளியாகி சக்கை போடு போடுகிறது.

  • யார் இந்த ஜிக்னா வோரா?

2011-ல் போட்டி சூழ் ஊடக உலகில் தினமும் ஒரு முன்பக்கத் தலைப்புச் செய்தியைக் கொடுத்துவிட வேண்டும் என மும்பை நகரில் முண்டியடித்த பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவர். கிரைம்பிரிவு பத்திரிக்கைத்துறையில் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருந்த பெண். இவரைப் போன்றே வேறொரு ஊடகத்தில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜிக்னா வோரா என்ற பெண் பத்திரிக்கையாளர் சொல்லித்தான் கொலை செய்ததாக கொலைக்குப் பொறுப்பேற்ற கேங்ஸ்டர் சோட்டா ராஜன் கூறியதால் கைதாகி சிறை சென்றார் ஜிக்னா வோரா.

  • சிறை வாழ்க்கை புத்தகம்

Behind the Bars in Byculla – My days in Prison என்ற புத்தகத்தை எழுதினார். அதில் தனது துடிப்பு, தொழில் மீதான வேட்கை, குடும்பம், சிறை சென்றது, சிறையில் துன்புறுத்தப்பட்டது என அனைத்தையும் எழுதினார். நிபந்தனை ஜாமினில் வெளியே விடும் போது ஊடகத்தினரை சந்திக்கக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருந்தது. இதனால் தான் மிகவும் நேசித்த பத்திரிக்கை தொழிலை கூட அவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை உருவானது.

  • ஹன்சலின் படைப்பு

நிஜமான கதைகளை படைப்புக்களாக மாற்றுவதில் ஹன்சல் மேத்தா கை தேர்ந்தவர் என்பதை ஏற்கனவே ஸ்கேம் 1992 படத்தில் பார்த்து விட்டோம். அதேபோன்ற ஒரு உண்மை கதையை அடிப்படையாக வைத்து ஸ்கூப் படத்தை எடுத்து இருக்கிறார் ஹன்சல்.

  • கதை நகர்வு

தன்னுடைய பெயர் தாங்கிய கட்டுரை பிரபல பத்திரிகையில் 6ம் பக்கம் வந்திருப்பதை கண்டு தன் தாத்தாவிடம் வருத்தத்தை பகிர்ந்து கொண்டாலும், முதல் பக்க செய்திகளில் தன் பெயர் இடம் பெறச் செய்யப் போராடுகிறார் ஹீரோயினாக நடித்திருக்கும் கரிஷ்மா டான்னா. ஆண்டு உழைப்பில் பல பதவி உயர்வுகள் பெற்று குடும்பத்தையும் மகனையும் கூட சரிவர கவனிக்காமல் எக்ஸ்க்லுஸிவ் செய்துகளின் ஓடிக்கொண்டே இருக்கிறார். அவரது துடிதுடிப்பான கடின உழைப்பை கண்டு செய்தித் துறையில் பலருக்கும் பொறாமை. சோட்டா ராஜன் பற்றிய பல்வேறு செய்திகளை எழுதுகிறார் கதாநாயகி. மற்றொரு செய்தி நிறுவன பத்திரிக்கையாளர் கொலையாகும்போது போட்டியிலும் பொறாமையிலும் கதாநாயகி தான் சோட்டா ராஜன் மூலம் கொன்றதாக பலி சுமத்தப்பட்டது. உண்மையில் மற்றொரு பத்திரிக்கையாளரை கொன்றது யார்? சிறையில் அடைக்கப்பட்ட கதாநாயகிக்கு என்னென்ன மாதிரியான கொடுமைகள் நடத்தப்பட்டன? என்பதை தனக்கே உரிய டல்டோன் சினிமா பாணியில் விவரித்து இருக்கிறார் ஹன்சல் மேத்தா.

  • ‘நச்’ வசனமும் ஆத்மார்த்தமான நடிப்பும்

“என் அம்மா ஒரு கரப்பான் பூச்சியை கூட கொல்ல மாட்டார்” என்று மகன் கூறும் போது அவரை அணைத்துக் கொண்ட காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. சிறையில் ஆடைகள் இன்றி நடத்தப்பட்ட பரிசோதனையும், அதனால் கூனிக்குறுகிப்போன போதும், வாய்விட்டு கதறி அழுது தனது கவலைகளை வெளி கொட்டிய போதும் கரிஷ்மா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கரிஷ்மாவின் நடிப்பை பற்றி புகழ்ந்து பேசிய ஹன்சல் மேத்தா, ஒரு காட்சியில் கட் சொன்ன பிறகும் அழுகையை அடக்க முடியாமல் ஓடிச் சென்று ஓரமாக நின்று கரிஷ்மா அழுதபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே கண்கலங்கி விட்டதாக தெரிவித்திருந்தார். ஊடக உலகில் நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியை அப்பட்டமாக தோல் உரித்து காட்டி இருந்தார் ஹன்சல் மேத்தா.

ஸ்கூப் வெப்சீரிஸ் வெளியான பின் ஒரே மூச்சாக அனைத்து எபிசோடுகளையும் பார்த்துவிட்டு, ஜிக்னா வோராவைப் பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஜிக்னா வோரா. அப்போது, ஏன் சிறையில் இருக்கிறேன்? என்பதை ஏற்க முடியாமல் தான் அனுபவித்த தவிப்பை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நினைப்பு வந்ததாகக் கூறினார். ஆனால், தான் தவறு செயய்வில்லை என்பதை நிரூபிக்காமல் செத்திருந்தால், தன் மகன் மீது “கொலையாளியின் பிள்ளை” என இந்த சமூகம் முத்திரையே குத்தியிருக்கும் என எண்ணி மனதை மாற்றியதாகக் கூறினார். பலமான பெண்களை ஆண்களால் ஏற்க முடியாது என்றும் தனது ஆழமான கருத்தை வெளிப்படுத்தினார் ஜிக்னா வோரா!.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE