“யம்மா ஏய், இந்தாம்மா”, “இளந்தாரிப் பய”, “அடடா மழை இல்ல வர்மா, தஞ்சாவூர் ஜில்லாக்காரி“ என டயலாக் பேசி எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைத்த மாரிமுத்து உயிரிழந்தார்.

பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சலில் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது இதயத்தில் வலி ஏற்பட்டதை அறிந்து உஷாரானார். இதையடுத்து டப்பிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு வடபழனியில் உள்ள மருத்துவமனைக்கு தானே காரை ஓட்டிச் சென்று அனுமதியானார். அங்கேயே சுருண்டு விழுந்த அவரது உயிர் வெகு சீக்கிரத்திலேயே பிரிந்துவிட்டது. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்குநராக பணியாற்றிய படங்கள்

‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ என 2 படங்களை இயக்கியவர் மாரிமுத்து. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர்தான் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

சிறுவயதில் பள்ளியில் பேச்சுப்போட்டியில் முதல் பரிசை வைரமுத்து கையால் பெற்றவர் மாரிமுத்து. இவர் சென்னைக்கு சினிமா ஆசையில் வந்து சோழா ஹோட்டலில் பணியாற்றும்போது வைரமுத்துவைக் கண்டார். அவர்களுக்கு பேச்சுப்போட்டிக்குப் பின்பும் கடிதம் வாயிலான தொடர்பு இருந்ததால் அந்த சந்திப்பு எளிமையானது. மாரிமுத்துவின் கையெழுத்து அச்சடித்ததுபோல் அழகாக இருக்கும். அவரது மகன்கள் கார்கி கபிலன் எல்லாம் குட்டிப் பையன்களாக இருந்த காலத்தில் இருந்தே வைரமுத்துவின் ரசிகர்களுக்கு கடிதம் எழுதும் பணியை இரண்டரை ஆண்டுகள் செய்து வந்தார்.

இயக்குநராவதற்கு முன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். வைரமுத்து மட்டுமின்றி இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். வாலி, ஆசை, மன்மதன் படங்களில் உதவி இயக்குநராக இவரது பங்களிப்பு அதிகம் இருந்தது. தற்போது மாரிமுத்துவின் மரணத்திற்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பாரபட்சமின்றி பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாரிமுத்து உயிரிழப்பை அடுத்து வைரமுத்து இரங்கற்பா வெளியிட்டுள்ளார்.

“தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்”

சமீபமாக, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ தொடர் மூலம் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் அவரைக் கொண்டாடினர். அந்த நாடகத்தின் டப்பிங்கின் போதே அவர் உயிரிழந்தார்.

அவரின் மறைவு குறித்து எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம்,”காலையில் டப்பிங் முடித்துவிட்டு ஷூட்டிங் வருவதாக சொல்லி இருந்தார். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. எதிர்நீச்சல் சீரியல் டீமே கடும் அதிர்ச்சியில் இருக்கிறோம். அவரது குடும்பத்துக்கு இது பேரிழப்பு” என கண்ணீர் மல்க வேதனையோடு தெரிவித்தார்.

“போயிட்டு வாப்பு”

மாரிமுத்து இயக்கிய 2 படங்களிலுமே ஹீரோவாக நடித்தவர் பிரசன்னா. “இயக்குனர் ஜி. மாரிமுத்துவின் மறைவு அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கண்ணும் கண்ணும், புலிவால் படங்களில் இணைந்து பணியாற்றினோம். எங்களுக்குள் சகோதரர் போன்றதொரு பந்தம் இருந்தது. பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றாக செயல்பட்டோம். அவரது வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. தற்போது தான் ஒரு நடிகராக அவர் நல்ல நிலைக்கு வந்து கொண்டிருந்தார். அவர் இன்னும் சிறிது காலம் இருந்திருக்க வேண்டும். ஆத்மா சாந்தியடையட்டும் போயிட்டுவாப்பு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திறமைசாலி

இதுகுறித்து பதிவிட்ட நடிகை ராதிகா “மாரிமுத்துவின் மறைவைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். திறமைசாலியான அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். இவ்வளவு சீக்கிரம் போய்விட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளார்.

வடிவுக்கரசி

இரங்கல் செய்தி பற்றி பேசிய நடிகை வடிவுக்கரசி “ஆதி குணசேகரன் இல்லாமல் இனி எதிர்நீச்சல் என்னவாகுமோ? மாரிமுத்துவின் குடும்பமும், ஆதி குணசேகரனின் குடும்பமும் அவர் இல்லாததை எப்படி ஏற்றுக் கொள்வார்கள், மிக மிக இயற்கையாக நடிப்பவராயிற்றே, அவர் இல்லாமல் இரு குடும்பங்களும் எப்படி இருக்கும்?” என அழுதபடியே ஊடகத்தில் பேட்டி கொடுத்தார்.

படங்கள்

யுத்தம் செய், கொம்பன், மருது, திருநாள், பைரவா, மகளிர் மட்டும், மதுரவீரன், இனிமை, பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம், மிஸ்டர் லோக்கல், புலிக்குத்தி பாண்டி, சுல்தான், விக்ரம், ஜெய்லர் போன்ற பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் வெகுவாக ரசித்து வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் கூட தனது வீட்டில் உள்ளவர்கள், தனது மனைவி ஆகியோர் எதிர்நீச்சல் நாடகம் பார்த்து ஆதி குணசேகரனின் நடிப்பை பாராட்டியதாக குறிப்பிட்டு இருந்தார் மாரிமுத்து. அதேபோல் திருச்செல்வத்தை படம் இயக்குமாறும் கோரியிருந்ததாக தகவல் வெளியானது.

மாரிமுத்துவுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், ஈவன்ட் மேனேஜ்மென்ட் தொழில் செய்யும் அகிலன் ஒரு மகனும், ஐஸ்வர்யா என்ற பெயரில் டிஎல்எஃப்-ல் பணியாற்றும் ஒரு மகளும் உள்ளனர். மாரிமுத்து தனது கனவு இல்லத்தை கட்டி வந்த நிலையில் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மாரிமுத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின் செப்டம்பர் 9ஆம் தேதி தேனி வருசநாட்டுக்கு அருகே உள்ள பசுமலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவருடைய அண்ணன் தெரிவித்தார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE