இதுவா பிரிட்டிஷாரின் வீரம்? எனக் கர்ஜித்த – “சரோஜினி நாயுடு“
பிரிட்டிஷ்காரர்கள் குதிரை வண்டி வரும் சத்தம் கேட்டு இந்தியாவில் ஆண் மகன்களும் ஓடிச் சென்று ஒளியும் காலம் அது. அப்படி இருக்க லண்டனுக்கே சென்று பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக கர்ஜித்தவர் சரோஜினி நாயுடு.
“குடிகளைக் கொடிய விலங்குகள் போல் வேட்டையாடலாமா? நிரபராதிகளையும் நிராயுத பாணிகளையும் சுட்டு, மருந்து தீரும்வரை சுட்டேன் என்று ஜென்ரல் டயர் குண்டு மழை பொழிந்தானே? அது நியாயமா? பிரிட்டிஷாரின் வீரம் இதுதானா? பிரிட்டிஷ் ஜனநாயகம் இதுதானா?” என லண்டனில் நடந்த கூட்டத்தில் தீப்பிழம்பாக முழங்கினார் சரோஜினி நாயுடு.
இதைக் கேட்டு கொதித்து எழுந்த பிரிட்டிஷார் கூட “ஷேம் ஷேம்” என்று ஒருமித்த குரலில் ஆங்கிலேய அரசை வசை பாடியது கண்டு பிரிட்டிஷ் அரசாங்கமே திகைத்து நின்றது.
இதை அடுத்து இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
இந்தியாவில் அதுவும் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று லண்டன் சென்று பல மொழிகளையும் கலைகளையும் இலக்கியமும் கற்று தேர்ந்தவர் சரோஜினி நாயுடு.
பள்ளி பருவத்திலேயே கவிதை எழுத தொடங்கியவர் லண்டனில் படிக்கும் போதும் சரி, சுதந்திரப் போராட்டத்தில் சிறையில் உள்ள போதும் சரி கவி எழுதுவதை நிறுத்தவில்லை.
1925 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரத்துக்கு பின் உத்திரப்பிரதேசத்தில் கவர்னர் ஆனார். இவரே இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்று பெருமையும் பெற்றார்.
வெறும் கவிக்காக மட்டுமின்றி இந்தியாவுக்காக பிரிட்டிஷ் மண்ணிலேயே முழங்கிய ஒரு வீர பெண்ணை காரிகை -யும் தலைவணங்குகிறது.