உங்க குடும்பத்துக்கு முன்னோர் சாபம் இருக்கான்னு தெரியுமா?

சாபம் என்பது பல பிறவிகளுக்குத் தொடரும் எனக் கேள்விப் பட்டிருப்போம். அவ்வாறு உங்கள் குடும்பத்தில் ஆண்களுக்கு ஒரு வயதுக்கு மேல் தொழில் பாதிப்பது, பெண்கள் மட்டுமே சம்பாதிக்கும் சூழல், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் குடும்பம் பிரிவது, திருமண வாழ்க்கை நிலைக்காமல் போவது என பல தலைமுறைகளுக்கும் ஒரே மாதிரியான பிரச்னை தொடர்வதைப் பார்த்திருப்போம். எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும், அந்தப் பிரச்னை தீராது. என்னதான்டா பிரச்னை எனப் பார்க்க ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் போனால்தான் தெரியும். அது முன்னோர் சாபமாக இருக்கலாம் என்று.

முன்னோர் சாபம் எப்படி வரும்?

முன்னோர் இறந்தபின் அந்தக் குடும்பத்தின் மூத்த ஆண்மகனோ, அல்லது ஒரு மகள், ஒரு மகன் இருந்தால், அந்த ஆண்பிள்ளையோ திதி கொடுப்பார்கள். அப்படி திதி கொடுக்காத போது அது முன்னோர் சாபமாக மாறுவதாக நம்பப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் பூசம், விசாகம், சதயம் நட்சத்திரங்களில் யாரேனும் பிறக்கிறார்கள் என்றால் அங்கு முன்னோர்கள் சாபம் இருப்பதாக சில ஆன்மிக வாதிகள் தரப்பு கூறுகிறது. இது மூன்றிலுமே தனுர் லக்கினம் தொடர்புடையது என்பதால் அவர்கள் பிறக்கும் முன்பாக இறந்த யாரோ ஒருவருக்கு திதி கொடுக்காமல் விடப்பட்டிருக்கிறது எனக் கூறுகின்றனர்.

முன்னோர்கள் இறந்த திதியன்று பிராமணரை அழைத்து விரிவான சடங்கு செய்து அவர்களின் ஆன்மாவைத் திருப்திப்படுத்துவதாக திவசம் செய்யப்படுகிறது.

திவசம் செய்வது வம்சத்துக்கான ஆரோக்யம், நல்வாழ்க்கை கிடைக்கவும், பிரச்னைகளில் இருந்து விடுபடச் செய்யும்படி பித்ருக்கள் நம்மை ஆசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.

நாம் பார்க்காத முன்னோர்கள் நமக்கு சாபம் விட்டால் பலிக்குமா?

முன்னோர்கள் சாபம் என்றதும் நாமே நேரடியாக முன்னோருக்கு தீங்கு விளைவித்ததாக நினைக்கலாம். ஆனால் அப்படியில்லை. நம் முன்னோர் செய்த தவறும் வாழையடி வாழையாய் சாபமாகப் பின் தொடரும்.
யாரால் பெற்றோர்களுக்கு அல்லது முன்னோர்களுக்கு தர்ப்பண காரியங்களை செய்ய முடியாமல் போகிறதோ, அதன் கர்ம வினை பாதிக்கக் கூடாது என கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்யும்படி கூறுகின்றனர்.

பெற்றோர் சாபம்

என்னதான் பிள்ளைங்க தப்பு பண்ணாலும், பெற்றோர்கள் சபிப்பதில்லை. கோபத்தில் வெறும் உதடுகளால் விடும் வார்த்தை சாபமாகாது. மனதால், ஆத்மார்த்தமாக நொந்து, வலி அனுபவித்து விடும் வார்த்தையே சாபமாக உருவெடுத்து துரத்துகிறது.

மேலும் தெரிந்தோ, தெரியாமலோ பெற்றோரோ, முந்தைய தலைமுறையினரோ பாவங்களை செய்தால் அது தலைமுறைகளை பாதிப்பதாக கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான பரிகாரமாக சற்றும் கவுரவம் சுயநலம் பார்க்காது இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் மனதார உதவினாலே போதும். ஏழையின் சிரிப்பில் இறைவனையும் காணலாம். இறைவன் கண்ணும் உங்கள் மீது படும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE