இரும்பு பெண் இந்திரா காந்தி ட்ரெண்ட் ஆவது ஏன்?
நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ட்ரெண்ட் ஆகி வருகிறார். இது ஏன் என்று புரியாமல் பலரும் குழம்புகின்றனர். அவர்களுக்கான விளக்கம்தான் இந்த தொகுப்பு.

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம்தான், இந்திரா காந்தி ட்ரெண்ட் ஆவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இரு நாடுகளும் போரை நிறுத்த சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். அதன் பின்னர்தான் இந்திய, பாகிஸ்தானிய பிரதிநிதிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தன. அதாவது, இந்த போர் நிறுத்தத்திற்கு பஞ்சாயத்து நடத்தியது டிரம்ப்தான் என்பது உறுதியாகிறது.
இந்திரா காந்திக்கு என்ன தொடர்பு?
இதற்கும் இந்திரா காந்திக்கும் என்ன தொடர்பு என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். 1971ஆம் ஆண்டு சுதந்திரம் கேட்டு பங்களாதேஷ் மக்கள் போராடத் தொடங்கினர். அதுவரை, அந்நாடு கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தான் நாட்டின் கண்ட்ரோலில் இருந்தது. இது தனி நாடாக இருக்க வேண்டும் என்று பஞ்சாயத்து செய்து முடித்து வைத்தது இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு. அப்போது, உலக தலைவர்களிடம் இருந்து வந்த அழுத்தத்திற்கு இந்திரா காந்தி இரங்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் மார் தட்டுகின்றனர்.
நரேந்திர மோடி vs இந்திரா காந்தி
மோடி vs இந்திரா என்ற இந்த விவாதம், பாஜக vs காங்கிரஸ் என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் வலுவான தலைவராக முன்னிறுத்திக் கொள்ளும் மோடி, அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு பணிந்தது ஏன் என்று காங்கிரஸார் கேள்வி எழுப்புகின்றனர். அதேநேரம், 1971ஆம் ஆண்டு, இந்திரா காந்தி செய்த தவறுகளை பாஜகவினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
நாட்டுக்கு என்ன தேவை?
இந்திரா காந்தியோ, நரேந்திர மோடியோ, வேறு யாரோ! நாட்டிற்கு என்ன தேவையோ அதை செய்வதே சிறந்ததாகும். இக்கட்டான இந்த சூழலில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தள்ளி வைத்துவிட்டு, கட்சி பாகுபாடின்றி நாட்டின் பக்கம் நிற்பதே அனைவரும் எண்ணமாக இருக்கிறது. புரிந்து கொள்வார்களா அரசியல்வாதிகள்?